1. Home
  2. தமிழ்நாடு

நகைகளை கொள்ளையடிக்க பெண்ணை தாக்கி எரிவாயுவைத் திறந்துவிட்டு தீ மூட்டி நாடகம் போட்ட கொடூரன்..!

1

 பாலக்காடு மாவட்டம் சோரனூர் அருகே உள்ள நீலமலைக்குன்னு பகுதியைச் சேர்ந்த பத்மினி, 74, தங்கம் 71, என்ற சகோதரிகளுக்குத் திருமணம் ஆகவில்லை. அவர்கள் இருவரும் ஒரே வளாகத்தில் உள்ள இரு வீடுகளில் தனித்தனியாக வசித்து வந்தனர்.

இந்நிலையில் பத்மினி தங்கியிருந்த வீட்டில் இருந்து வெள்ளிக் கிழமை அலறல் சத்தம் கேட்டது. வீட்டுக்குள் இருந்து புகை வந்தது. அக்கம்பக்கத்தினர் ஓடிச் சென்று பார்த்தபோது பத்மினியும் தங்கமும் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தனர். அப்போது அவர்களது வீட்டுக்குள் இருந்து ஒருவர் தப்பியோட முயன்றார். அந்த நபருக்குக் கழுத்து, முகம் உள்ளிட்ட இடங்களில் தீக்காயம் ஏற்பட்டிருந்தது.

அக்கம்பக்கத்து வீட்டினர், அந்த நபரை சுற்றி வளைத்துப் பிடித்து விசாரித்தனர். அதற்கு அந்த நபர், வீட்டுக்குள் தீப்பிடித்ததைப் பார்த்து அதில் சிக்கியவர்களைக் காப்பாற்ற வந்ததாக தெரிவித்தார்.

ஆனால் அந்த நபர் மீது சந்தேகம் எழுந்ததை அடுத்து காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறை விசாரணையில் அந்த நபர் பட்டாம்பி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், 48, என்பது தெரியவந்தது. மணிகண்டன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரின் உள்ளாடைக்குள் தங்க நெக்லஸ், தங்க வளையல்கள் இருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.அந்த நகைகள் தீயில் கருகி இறந்த சகோதரிகளின் நகைகள் என்பது விசாரணையில் தெரியவந்தது.

அதனடிப்படையில் மருத்துவமனையில் இருந்த மணிகண்டனிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது தங்க நகைகளுக்காக வயது முதிர்ந்த சகோதரிகள் இரண்டு பேரையும் எரித்துக்கொன்ற அதிர்ச்சித் தகவலை மணிகண்டன் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சகோதரிகளின் வீட்டில் மணிகண்டன் சாயம் பூசும் வேலை பார்த்திருக்கிறார்.அப்போது சகோரிகள் இருவரும் தனியாக வசித்து வருவதை நோட்டமிட்ட அவர், அவர்களது வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டு பட்டப்பகலில் பத்மினி வீட்டில் இருந்த நகைகளைக் கொள்ளையடிக்க முயன்றார்.

பத்மினி சத்தம் போட சத்தம் கேட்டு, பக்கத்து வீட்டில் இருந்த தங்கம் வந்தார். மணிகண்டனுடன் தனது அக்காள் போராடுவதை பார்த்த தங்கம் தன் சகோதரியுடன் சேர்ந்துகொண்டு மணிகண்டனின் கொள்ளை திட்டத்தை முறியடிக்க முயன்றனர்.அப்போது மணிகண்டன், சகோதரிகள் இருவரையும் கட்டையால் சரமாரியாக அடித்து நிலைகுலைய வைத்து நகைகளை எடுத்துக்கொண்டு வீட்டின் சமையலறையில் இருந்த எரிவாயுத் திறந்து தீவைத்துவிட்டு ஓடிவிட்டார்.

ஓடியபோது மணிகண்டனுக்கு முகம், கழுத்தில் தீப்புண் ஏற்பட்டது. மணிகண்டனை காவல்துறை கைது செய்தது. அதிகாரிகள் கண்காணிப்பில் மருத்துவமனையில் அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

Trending News

Latest News

You May Like