என்றென்றும் அழகன் நடிகர் 'மம்முட்டி' பிறந்தநாள் இன்று! மம்முட்டி பெயர் வந்த கதை தெரியுமா ?

1971ம் ஆண்டு வெளியான அனுபவங்கள் பாலிசகள் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் மம்முட்டி. ஆனால் அது பெரிய வெற்றி பெறவில்லை. ஆனால் 1980 ஆம் ஆண்டு எம்.டி. வாசுதேவன் நாயர் இயக்கத்தில் வெளிவந்த “வீல்கணுண்டு ஸ்வப்ணங்கள்” திரைப்படம், இவருக்கு ஒரு நல்ல திருப்பமாக இருந்தது. இதையடுத்து மேலா, திருஸ்னா போன்ற படங்கள் அவரை மலையாள திரை உலகில் கதாநாயகன் அந்தஸ்தை பெற்று தந்தது. இதையடுத்து. அஹிம்சா, யவனிகா, கூடேவிதே, ஆள் கூட்டத்தில் தனியே, சிபிஐ, டைரி குறிப்பு என ஏராளமான வெற்றிப்படங்களில் நடத்திருந்தார்.இவர் இதுவரை எண்ணற்ற வெற்றித் திரைப்படங்களை கொடுத்துள்ளார்.மலையாள மொழியில் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
மம்முட்டி பல மதிப்புமிக்க அங்கீகாரங்களை வென்றுள்ளார். சிறந்த நடிகருக்கான தேசிய விருதை மூன்றுமுறையும், ஏழுமுறை கேரள திரைப்பட மற்றும் 13க்கும் மேற்பட்ட தென்னிந்திய பிலிம்பேர் பிலிம்பேர் விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.
இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிகளில் கடந்த 2000ம் ஆம் ஆண்டில் வெளிவந்த டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அவரது பிறந்த நாளான இன்று மம்முட்டி தமிழ் திரையுலகில் நடித்த முக்கிய திரைப்படங்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.
மௌனம் சம்மதம்
தமிழ் திரையுலகில் மௌனம் சம்மதம் திரைப்படத்தின் மூலம் காலடி பதித்த மம்முட்டி அதைத்தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். மௌனம் சம்மதம் இயக்குனர் கே. மது இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் மம்முட்டி அமலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்
தளபதி
தளபதி 1991ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மணிரத்னம் இப்படத்தை இயக்கினார். ரஜினிகாந்த், மம்முட்டி, அரவிந்த் சாமி, ஷோபனா மற்றும் பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்களான அர்ஜூனன் (அர்ஜீன்) கர்ணா (சூர்யா) துரியோதனன் (தேவ்ராஜ்) போன்றவர்கள் மகாபாரதக் கதையில் பின்னப்பட்ட கதாபாத்திரங்கள் ஆகும்.
மறுமலர்ச்சி
பாரதி இயக்கத்தில் ஹென்றியின் தயாரிப்பில் எஸ். ஏ. ராஜ்குமார் இசையில் 1998ல் வெளியாகி வணிகரீதியில் வெற்றி பெற்றத் திரைப்படம் மறுமலர்ச்சி. மம்மூட்டி, தேவயானி, மனோரமா, ரஞ்சித் மற்றும் மன்சூர்அலி கான் ஆகியோரது நடிப்பில் இத்திரைப்படம் வெளியானது. மேலும் தெலுங்கில் சூரியுடு என்றும் கன்னட மொழியில் சூரப்பா என்றும் இந்தியில் மிதுன் சக்கரவர்த்தி நடிப்பில் பிஹூல் ஆர் ஆக் என்றும் ரீமேக் செய்யப்பட்டது.
ஆனந்தம்
ஆனந்தம் 2001ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். லிங்குசாமி இயக்கத்தில் ஆர். பி. சவுத்திரி இப்படத்தை தயாரித்துள்ளார். இதனை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இப்படத்தில் மம்மூட்டி முரளி அப்பாஸ் தேவயானி ரம்பா சினேகா டெல்லி கணேஷ் மற்றும் ஸ்ரீவித்யா ஆகியோர் நடித்துள்ளனர்.
பேரன்பு
பேரன்பு திரைப்படத்தை எழுதி இயக்கியவர் ராம் ஆவார். இப்படத்தில் முதன்மைப் பாத்திரங்களல் மம்மூட்டி, அஞ்சலி, சாதனா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா பின்னணி அசையமைத்துள்ளார். இப்படமானது ராபர்ட்டாம் சர்வதேச திரைப்பட விழாவிலும், சீனாவின் ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.
மம்முட்டி பெயர் வந்த கதை
முகமது குட்டி என்ற பெயரை மம்முட்டி என மாறியதில் ஒரு சுவாரஸ்யம் உள்ளது. பலரும் நினைப்பது போல் திரைப்படத்திற்காக மம்முட்டி தனது பெயரை மாற்றி கொள்ள வில்லை. அவருக்கு மம்முட்டி என்ற பெயரை வைத்தது அவரது நண்பன் தான்.
சிறுவயதில் முகமது குட்டி என்ற பெயர் தனக்கு பிடிக்காததால் அவர் தனது நண்பர்களிடம் ஓமர் என்றும் ஷெரிப் என்றும் கூறிக் கொள்வார். பள்ளியில் வெகு நாட்களாக எல்லோரிடமும் தன்னுடைய பெயரை ஓமர் என்றும் ஷெரிப் என்றுமே பலரிடம் கூறி வந்துள்ளார். அதை அவரது நண்பர்களும் நம்பி இருந்தனர். அப்போது ஒரு நாள் ஓமர் ஷெரிப்பாக எல்லோரும் நினைத்திருந்த முகமது குட்டியின் பள்ளி அடையாள அட்டை தவறி கீழே விழுந்து விட அதை எடுத்த ஒரு மாணவன் அடையாள அட்டையை பார்த்துவிட்டு 'டேய்.. உன்னுடைய பெயர் முகமது குட்டியா..?? இவ்வளவு நாளா.. எங்களை ஏமாற்றி விட்டாயா..!! என்றும் முகமது குட்டியை சுருக்கி மம்முட்டி என்று பட்ட பெயர் வைத்து கோபமாக கத்தியுள்ளான். இதையடுத்து அவரது நண்பர்கள் மம்முட்டி மம்முட்டி என்று கிண்டலாக அழைக்க ஆரம்பித்தனர்.