1. Home
  2. தமிழ்நாடு

மம்தா பானர்ஜியின் இளைய சகோதரர் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை!

1

திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜியின் இளைய சகோதரர் பாபுன் பானர்ஜியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவரால் வாக்களிக்க முடியவில்லை.

ஹவுரா நகரின் வாக்காளரான பாபுன் பானர்ஜி, ஹவுரா டவுன் பகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களிக்கச் சென்றபோது, அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாதது தெரியவந்தது. இதனால் அவர் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்தோடு திரும்பினார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த திரிணமூல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சாந்தனு சென், “இந்திய தேர்தல் ஆணையம்தான் தேர்தல் தொடர்பான முழு விஷயத்தையும் கவனித்து வருகிறது. இது எப்படி நடந்தது என்பதை தேர்தல் ஆணையம்தான் கூறவேண்டும்” என்று கூறினார். இந்த சம்பவம் குறித்து பாபுன் பானர்ஜி தனது கருத்தை தெரிவிக்க மறுத்துவிட்டார்.

ஹவுரா மக்களவை தொகுதியில் பாபுன் பானர்ஜி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திரிணமூல் காங்கிரஸ் சார்பில் அந்த தொகுதியில் ஏற்கெனவே எம்.பி.யாக உள்ள பிரசுன் பானர்ஜிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனால் பாபுன் பானர்ஜி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். மேலும், அவர் அத்தொகுதியில் இருந்து சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடவுள்ளதாகவும் தகவல்கள் பரவின. இதனால் கோபமடைந்த மம்தா பானர்ஜி, பாபுனுக்கு தனக்கும் எந்த உறவும் இனி இல்லை என அறிவித்தார்.

பாபுன் பானர்ஜி பெங்கால் ஒலிம்பிக் சங்கம் மற்றும் பெங்கால் ஹாக்கி சங்கத்தின் தலைவராகவும், பெங்கால் குத்துச்சண்டை சங்கத்தின் செயலாளராகவும் உள்ளார். மேலும் அவர் திரிணமூல் காங்கிரஸின் விளையாட்டுப் பிரிவின் பொறுப்பாளராகவும் பதவி வகிக்கிறார்.

Trending News

Latest News

You May Like