பாஜகவின் வாக்குறுதிகள் மீண்டும் நம்புவது சரியாக இருக்காது - மல்லிகார்ஜுன கார்கே..!

மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் 19-ல் நடைபெறுகிறது. இந்த நிலையில், பாஜகவின் வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கை இன்று காலை வெளியிடப்பட்டது. ஒரே நாடு ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம், ஏழைக் குடும்பங்களுக்கு இலவச மின்சாரம் உள்ளிட்ட வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்தன.
இதனிடையே தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பாஜகவின் தேர்தல் அறிக்கையை மீண்டும் நம்புவது சரியாக இருக்காது என்றார்.
"விவசாயிகளின் வருமான இரட்டிப்பாக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்படும், இதற்கான சட்ட உத்தரவாதம் அளிக்கப்படும் என்றார். அவருடைய ஆட்சிக் காலத்தில் நாட்டு மக்களுக்குப் பலனளிக்கும் எதையும் அவர் செய்யவில்லை. இளைஞர்கள் வேலை இல்லாமல் திண்டாடுகிறார்கள். பணவீக்கம் அதிகரிக்கிறது. பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை குறித்தெல்லாம் அவருக்கு எந்தக் கவலையும் இல்லை.
மீண்டும் அவர்களுடைய தேர்தல் அறிக்கையை நம்புவது சரியாக இருக்காது. மக்கள் நலன் சார்ந்து செயல்பட செய்ய அவரிடம் எதுவும் இல்லை என்பது நிரூபனம் ஆகிவிட்டது" என்றார் கார்கே.