மதிமுகவில் இருந்து விலகியவர்களை இணைக்க புதிய கட்சி தொடங்கினார் மல்லை சத்யா!
மதிமுக துணை பொதுச் செயலாளராக இருந்தவர் மல்லை சத்யா. இவருக்கும், பொதுச் செயலாளர் வைகோ மற்றும் முதன்மை செயலாளர் துரை வைகோ எம்பி ஆகியோருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இந்நிலையில் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக மல்லை சத்யா கடந்த மாதம் தற்காலிகமாக பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.
மேலும் இது தொடர்பாக மல்லை சத்யாவிடம் விளக்கம் பெறப்பட்ட நிலையில், மதிமுக கொள்கை, நன்மதிப்பு, ஒற்றுமைக்கு கேடு விளைவிக்கும் வகையில் செய்யப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டு, மதிமுகவின் சட்ட திட்டங்களின்படி துணை பொதுச் செயலாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் மல்லை சத்யாவை நிரந்தரமாக நீக்கி வைகோ அறிவிப்பு வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வந்த மல்லை சத்யா, அண்ணா 117-வது பிறந்த நாள் விழா, திராவிட ரத்னா விருது வழங்கும் விழா மற்றும் திராவிட இயக்கம் உதயமான திருநாள் ஆகிய முப்பெரும் விழாவை காஞ்சிபுரம் கே.பி.கே. திருமண மண்டபத்தில் இன்று நடத்தினார்.
முன்னதாக காஞ்சிபுரம் பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மல்லை சத்யா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதை தொடர்ந்து பேரணியாக நெல்லுக்கார வீதியில் இருந்து புறப்பட்டு இரட்டை மண்டபம், காமராஜர் வீதி, தாலுகா அலுவலகம் வழியாக திருமண மண்டபம் வந்தனர்.
நிகழ்ச்சிக்கு கராத்தே எம்.பழனிச்சாமி தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் இ.வளையாபதி வரவேற்று பேசினார். இதில், மொழிப்போர் தியாகிகள் மற்றும் சமூகநீதி ஆர்வலர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.
இதனைத் தொடர்ந்து முப்பெரும் விழா நடைபெற்றது. பேராசிரியர் அப்துல்காதர் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் எம்எல்ஏ திருப்பூர் துரைசாமி, திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத், திருவள்ளூர் மாவட்ட முன்னாள் செயலாளர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், புலவர் செவ்வந்தியப்பன், வழக்கறிஞர் அழகு சுந்தரம், பக்ரைன் நாட்டை சார்ந்த வல்லம் பஷீர், இந்தோனேசியா நாட்டை சேர்ந்த விசாகன், வாசுகி பெரியார்தாசன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
பின்னர் புதிய கட்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும், கட்சிக்கான கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டது. கருப்பு மற்றும் சிவப்பு நிற கொடியில் 7 நட்சத்திரங்கள் இடம் பெற்றுள்ளன. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ''புதிய கட்சி தொடங்கி இருக்கிறோம். அனைவருடனும் கலந்தாலோசித்து அடுத்த கட்ட நகர்வு குறித்து முடிவெடுப்போம். கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மதிமுகவில் இருந்து விலகியவர்களை இணைக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. கட்சியின் பெயரை நவம்பர் 20 ஆம் தேதி அறிவிப்போம்'' என்று கூறினார்.
விழாவில் கலந்து கொண்ட மூத்த நிர்வாகிகளுக்கு பேரறிஞர் அண்ணா சிலையுடன் கூடிய நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. அதில் திராவிட குடியரசு விடுதலைக் கழகம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், அதுவை கட்சியின் பெயராக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
.png)