5 நாள் பயணமாக இந்தியா வருகிறார் மாலத்தீவு அதிபர்..!
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளதாவது:-
மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸ் வரும் அக்டோபர் 6 முதல் 10 வரை அரசுமுறைப் பயணமாக இந்தியா வருகிறார். இந்த பயணத்தின் போது, இருத்தரப்பு உறவு, பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடியுடன் அவர் ஆலோசிக்கிறார். தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவையும் அவர் சந்திக்கிறார். மேலும் டெல்லி மட்டுமின்றி, மும்பை மற்றும் பெங்களூருவில் நடைபெறும் வணிகம் தொடர்பான நிகழ்வுகளிலும் அவர் கலந்து கொள்கிறார். இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
சீன நாட்டின் ஆதரவாளராக கருதப்படும் முகமது மூயிஸ், கடந்த 2023 நவம்பரில் மாலத் தீவு அதிபராக பதவியேற்ற உடன், மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரா்கள் வெளியேற கெடு விதித்தாா். அதன்படி இந்திய வீரா்கள் திரும்ப அழைக்கப்பட்டு, அவா்களுக்கு மாற்றாக இந்தியா சாா்பில் வழங்கப்பட்ட ஹெலிகாப்டா்களை பராமரிக்கும் பணிக்கு தொழில்நுட்ப பணியாளா்கள் அனுப்பப்பட்டனா்.
தொடா்ந்து இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை அதிபா் மூயிஸ் எடுத்து வருவதால், இரு நாடுகளிடையேயான உறவு பாதிக்கப்பட்டது. இருப்பினும், மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸ் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற பிரதமா் மோடி தலைமையிலான புதிய அரசின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றார்.
அதைத்தொடர்ந்து வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கடந்த ஆகஸ்ட் மாதம் மாலத்தீவு சென்ற நிலையில் தற்போது மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸ் இந்தியா வருகை தரவிருப்பது குறிப்பிடத்தக்கது.