பிரபல மலையாள நடிகை மீனா கணேஷ் காலமானார்..!
நடிகை மீனா கணேஷ் கடந்த 1942ஆம் ஆண்டு பாலக்காட்டில் பிறந்தார். இவரது தந்தை கே.பி. கேசவன் தமிழ் படங்களில் நடித்தவர். இவரது தந்தையைப் போல் தானும் நடிகர் ஆகவேண்டும் என்ற எண்ணத்தை தனது பள்ளிப்பருவத்திலேயே வளர்த்துக் கொண்டவர். இதனால், முறையாக நடிப்பினைக் கற்றுக் கொள்ள, நாடக சங்கங்களில் சேர்ந்து, நடிப்பினைக் கற்றுக் கொண்டார். முதலில் நாடகங்களில் நடித்து வந்த மீனா கணேஷ், அதன் பின்னர்தான் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.
பாலக்காடுதான் இவர் இருந்த ஊர் என்பதால், தமிழ்நாட்டில் கேரள எல்லையை ஒட்டியுள்ள, கோவை, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் மலையாள சங்கங்கள் ஏற்பாடு செய்த நாடகங்களிலும் நடித்துள்ளார்.சினிமா நன்கு வளர வளர, நாடகத்தில் இருந்து சினிமாவிலும் கால் பதித்தார் மீனா கணேஷ்.
சினிமாவில் காலடி எடுத்து வைத்த பின்னர், அதிகம் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், அம்மா கதாபாத்திரங்களிலும்தான் நடித்தார். சுமார் ஆயிரம் நாடக மேடைகளை அலங்கரித்த மீனா கணேஷ், சினிமாவில், 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர், சினிமாவிலும் நடிக்க அவரது உடல் ஒத்துழைப்பு வழங்காததால், சினிமாவில் இருந்தும் ஓய்வில் இருந்தார். இப்படியான நிலையில், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மீனா கணேஷ், வயது மூப்பு காரணமாகவும், சிகிச்சை பலனின்றியும் உயிரிழந்தார். இவரது மறைவு, மலையாள திரைத்துறையினரையும், நாடக குழுக்களைச் சேர்ந்தவர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.