இன்று முதல் நடைமுறைக்கு வரும் முக்கிய மாற்றங்கள்..! எல்பிஜி சிலிண்டர், அகவிலைப்படி, UPI, FD விதிகள்..!

இன்று மார்ச் 1 முதல் மாறவுள்ள சில முக்கிய விதிகள் பற்றி இங்கே காணலாம்.
மார்ச் மாதத்தில் ரயில் பயணம் செய்ய திட்டமிடுவதற்கு முன்பு நீங்கள் செல்லும் வழித்தடத்தில் குறிப்பிட்ட நாட்களில் ரயில்கள் இயங்குமா அல்லது ரயில் வழிமாற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதைத் தெரிந்துகொள்வது மிகவும் நல்லது. இதன் மூலம் பயணத்தில் எந்தவித சிரமமும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அதேபோல் பொது டிக்கெட் (general ticket) வைத்திருப்பவர்களுக்கான விதிகளில் சில திருத்தம் செய்ய இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கடந்த சில வாரங்களுக்கு முன்பு கும்பமேளாவிற்கு செல்வதற்காக டெல்லி ரயில் நிலையத்துக்கு வந்த சிலர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த சம்பவத்தையடுத்து இந்த மாற்றங்கள் பரிசீலிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதாவது பொதுவாக பயணிகள் பொது டிக்கெட்டுடன் எந்த ரயிலிலும் ஏறலாம், ஆனால் விரைவில் கொண்டுவரப்படும் புதிய மாற்றத்தில் ரயிலின் பெயர் டிக்கெட்டில் குறிப்பிடப்படலாம். இதன்மூலம் பயணிகள் அவரவர் ரயிலுக்கு மட்டும் செல்லும் வகையில் திருத்தம் செய்யப்படலாம். குறிப்பாக இந்த வசதி மூலம் குறிப்பிட்ட ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தடுக்க முடியும்.
மேலும் பொது டிக்கெட் வாங்கிய நேரத்தில் இருந்து சரியாக 3 மணிநேரம் மட்டுமே செல்லுபடியாகும் என்பது சில பயணிகளுக்குத் தெரியாது. எனவே இந்த காலக்கெடுவிற்குள் பயணம் தொடங்கப்படாவிட்டால், டிக்கெட் செல்லாது. பொது டிக்கெட்டுகளில் ரயில் பெயர்களை குறிப்பிடுவதன் மூலம் பயணிகளின் கூட்டத்தை ஒழுங்குபடுத்த அதிகாரிகளுக்கு உதவும். இதுதவிர எந்த ரயிலில் ஏறலாம் என்பது பற்றி பயணிகளிடையே தெளிவு கிடைக்கும்.
ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் எண்ணெய் நிறுவனங்கள் LPG சிலிண்டர் விலைகளை மாற்றியமைக்கின்றன. மார்ச் 1, 2025 அன்று, வீட்டு உபயோக மற்றும் வணிக LPG சிலிண்டர்களுக்கான புதிய விலைகள் அறிவிக்கப்படும். விலைகளில் ஏற்படும் அதிகரிப்பு அல்லது குறைப்பு சாமானியர்களின் வரவு செலவை பாதிக்கலாம்.
ஜனவரி 2025 -க்கான டிஏ உயர்வு (DA Hike) பற்றிய அறிவிப்பு இந்த மாதம் வரும். மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகியவை 3% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
CNG மற்றும் PNG உள்ளிட்ட இயற்கை எரிவாயுவின் விலைகள் மாதந்தோறும் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன. கூடுதலாக, விமான டர்பைன் எரிபொருள் (ATF) விகிதங்களும் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சரிசெய்யப்படுகின்றன. இந்த விலைகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் வாகன உரிமையாளர்கள், சாமானிய மக்கள் மற்றும் வணிகங்களுக்கான செலவுகளை அதிகரிக்கலாம் அல்லது குறைக்கலாம்.
மார்ச் 1, 2025 முதல், UPI பரிவர்த்தனைகளில் ஒரு குறிப்பிடத்தக்க புதுப்பிப்பு இருக்கும். புதிய IRDAI விதியின் கீழ், UPI மூலம் காப்பீட்டு பிரீமியங்களை செலுத்துவது எளிதாகவும் வசதியாகவும் மாறும். இந்த மாற்றம் பாலிசிதாரர்களுக்கு டிஜிட்டல் முறையில் கட்டணங்களை செலுத்துவதை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் டீமேட் கணக்குகளின் நாமினிகள் தொடர்பான சில விதிகளை SEBI சமீபத்தில் மாற்றியுள்ளது. இப்போது முதலீட்டாளர்கள் தங்கள் போர்ட்ஃபோலியோவில் அதிகபட்சம் 10 நாமினிகளை குறிப்பிடலாம். அவர்கள் நாமினிகள் பற்றிய கூடுதல் விவரங்களையும் வழங்க வேண்டும். முதலீட்டாளரின் பவர் ஆஃப் அட்டர்னி வைத்திருப்பவர்கள் நாமினிகளை அறிவிக்க முடியாது. உரிமை கோரப்படாத சொத்துக்களைக் குறைப்பதற்கும் முதலீட்டு நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும் சந்தை ஒழுங்குமுறை ஆணையத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய விதிகள் மார்ச் 1, 2025 முதல் அமலுக்கு வரும்.
பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO): சமீபத்தில் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஒரு முக்கிய தகவலை வெளியிட்டது, அதன்படி உலகளாவிய கணக்கு எண்ணை (UAN) செயல்படுத்துவதற்கும் வங்கி கணக்குகளை ஆதார் உடன் இணைப்பதற்கும் காலக்கெடுவை மீண்டும் நீட்டித்துள்ளது EPFO அமைப்பு. அதுவும் வரும் மார்ச் 15 2025 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுவும் முன்பு யுனிவர்சல் கணக்கு எண் (UAN) மற்றும் வங்கி கணக்குகளை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான காலக்கெடு 2025 பிப்ரவரி 15-ம் தேதி என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த காலக்கெடுவை மீண்டும் நீட்டித்து வரும் மார்ச் 15-ம் தேதிக்குள் இந்த வேலையை முடிக்க வேண்டும் என்று கூறியுள்ளது பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு.
UAN செயல்படுத்தப்பட்டதும் ஊழியர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதி (PF) கணக்குகளை ஆன்லைனில் எளிதாக நிர்வகிக்க முடியும். அதாவது ஆன்லைனில் PF பாஸ்புக்கைப் பார்க்கவும் பதிவிறக்கவும் செய்யலாம். பின்பு ஆன்லைனில் பிஎஃப் முன்பணத்திற்கு விண்ணப்பித்தல் மற்றும் உங்கள் கோரிக்கையின் நிலையைத் தெரிந்துகொள்ளலாம். இதுதவிர வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை - ஈஎல்ஐ (Employment Linked Incentive- ELI) திட்டத்தை பெறுவதற்கு யுஏஎன் ஆக்டிவேட் (UAN Activate) செய்ய வேண்டும்.