இன்று முதல் வரப்போகும் முக்கிய மாற்றங்கள்..!

நவம்பர் மாதத்தில் பல மாற்றங்கள் வர இருக்கிறது. அவை என்னென்ன என்பது குறித்து தற்போது விவரமாக பார்க்கலாம்.
நவம்பர் 1 முதல் தொலைதொடர்புத் துறையில் மிகப்பெரிய மாற்றங்கள் வரவுள்ளது. ஜியோ மற்றும் ஏர்டெல் உள்ளிட்ட அனைத்து டெலிகாம் ஆபரேட்டர்களும் அனுப்பப்படும் குறுஞ்செய்திகளை கண்டறியும் தன்மையை செயல்படுத்துமாறு அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது . இதனால் ஸ்பேம் செய்திகள் கண்டறிந்து பயனாளர்களுக்கு சென்றடையாமல் தடுக்க முடியும். மேலும், ஸ்பேம் எண்களையும் தடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் சமையல் சிலிண்டர்களின் விலை முதல் தேதியில் மாறுவது வழக்கம். அந்த வகையில் நவம்பர் 1 ஆம் தேதி சிலிண்டர்களுக்கான திருத்தப்பட்ட விலையை பெட்ரோலிய நிறுவனங்கள் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India), உள்நாட்டு பணப் பரிமாற்றத்திற்கான (DMT) புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. இவை நவம்பர் 1, 2024 முதல் நடைமுறைக்கு வரும். ரிசர்வ் வங்கியின் புதிய பணப் பரிமாற்ற விதிகள் வங்கி செயல்முறைகளில் மோசடிகளைத் தடுப்பதையும் இவை தவறாகப் பயன்படுத்துவதை தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
நவம்பர் 1-ம் தேதி முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு விதிகள் மாற்றப்பட உள்ளன. இனி பயணிகள் ரயில் டிக்கெட்டுகளை முன்பு இருந்தது போல, 120 நாட்களுக்கு முன், முன்பதிவு செய்ய முடியாது. 60 நாட்களுக்கு முன்னர்தான் முன்பதிவு செய்ய முடியும். பயணிகளுக்கு டிக்கெட் முன்பதிவு செயல்முறையை எளிதாக்கும் வகையில் இந்திய ரயில்வே (Indian Railways) அட்வான்ஸ் டிக்கெட் முன்பதிவு விதிகளில் இந்த மாற்றத்தை செய்துள்ளது.
பாரத ஸ்டேட் வங்கியின் துணை நிறுவனமான எஸ்பிஐ கார்டு (SBI Card), கிரெடிட் கார்டு பயனர்களுக்கு சில புதிய விதிகளை அமல்படுத்த உள்ளது. நவம்பர் 1 முதல், அன்செக்யூர் எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளுக்கு மாதாந்திர நிதிக் கட்டணம் 3.75% ஆக இருக்கும். இதுமட்டுமின்றி, மின்சாரம் மற்றும் எரிவாயு போன்ற பயன்பாடுகளுக்கு 50,000 ரூபாய்க்கு மேல் பணம் செலுத்தினால் 1% கட்டணம் விதிக்கப்படும் என்பதையும் வங்கி வாடிக்கையாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
பங்குச் சந்தையில் நவம்பர் 1 முதல் பரஸ்பர நிதி துறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை அதிகரிக்க செபி கடுமையான விதிகளை அமல்படுத்த உள்ளது. அதன்படி அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனங்களால் (ஏஎம்சி) நிர்வகிக்கப்படும் நிதியில், அதனை நிர்வகிக்கும் அதிகாரிகளின் வாரிசுகள் மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள் ரூ.15 லட்சத்துக்கும் அதிகமான பரிவர்த்தனைகளை மேற்கொண்டால் அதை தெரியப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.