சென்னை மெட்ரோ ரயில் சேவையில் முக்கிய மாற்றம்..!
சென்னை மெட்ரோ ரயில்கள் வாரத்தின் அனைத்து நாட்களும் அதிகாலை 5 மணி முதல் இரவு 11மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப் படுகின்றன. வார நாட்களில் ( திங்கள் முதல் சனிக்கிழமை வரை ) விமான நிலையத்தில் இருந்து முதல் சேவை அதிகாலை 4.51 மணிக்கும், கடைசி சேவை இரவு 11 மணிக்கும் புறப்படும். நெரிசல் மிகுந்த அலுவலக நேரங்களில் 6 நிமிடத்துக்கு ஒரு ரயிலும், மற்ற நேரங்களில் 7 நிமிடத்துக்கு ஒரு ரயிலும் இயக்கப்படுகின்றன.
சென்ட்ரல் - பரங்கிமலை வழித் தடத்தில் நெரிசல் மிகுந்த நேரத்தில் 12 நிமிடத்துக்கு ஒரு ரயிலும், மற்ற நேரங்களில் 14 நிமிடத்துக்கு ஒரு ரயிலும் இயக்கப்படுகின்றன.
ஞாயிற்றுக் கிழமைகளில் அதிகாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை ரயில்கள் இயக்கப்பட்டாலும், சேவைகள் எண்ணிக்கை மாறுபடும். அதாவது, விமான நிலையம் - விம்கோ நகர் வழித் தடத்தில் அலுவலக நேரங்களில் 7 நிமிடத்துக்கு ஒரு ரயிலும், மற்ற நேரங்களில் 10 நிமிடத்துக்கு ஒரு ரயிலும் இயக்கப்படும். சென்ட்ரல் - பரங்கிமலை வழித் தடத்தில் 14 நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படும்.
இந்நிலையில், பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக, ஜனவரி 15, 16, 17-ம் தேதிகளில் ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த 3 நாட்களும் வழக்கம் போல, அதிகாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை ரயில்கள் இயக்கப்படும்.
காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையும் 10 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும். நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்.
இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.