ஏர்போர்ட் வந்தவுடன் மகாவிஷ்ணு கைது?
அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் மத்தியில் தன்னம்பிக்கை பற்றிய பேச்சு என்ற அடிப்படையில் உரை நிகழ்த்திய மகாவிஷ்ணு என்பவர் பாவ- புண்ணியம், மறுபிறவி என சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு பெரும் எதிர்ப்புகள் கிளம்பியது. அதோடு இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கரை மகாவிஷ்ணு மிரட்டும் தொனியில் பேசியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தமிழக அரசினுடைய கவனத்திற்கும் சென்றது. நேற்று அசோக் நகர் பள்ளிக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்றிருந்தார். அப்போது, இனி இதுபோன்ற சம்பவம் நடைபெறாத அளவிற்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் நாங்கள் எடுக்கப்படும் நடவடிக்கை தமிழகம் முழுமைக்குமான ஒட்டுமொத்த பாடமாக இருக்கும் எனத் தெரிவித்திருந்தார்.
சைதாப்பேட்டை மாடல் பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் மூடநம்பிக்கைகளை விதைக்கும் கருத்துகளைப் பேசியதோடு, மாற்றுத்திறனாளிகளை அவமதித்தை கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் சைதை மாந்தோப்பு பள்ளி முன்பு கண்டன போராட்டம் நடத்தினர். அதேபோல் அசோக் நகர் காவல் நிலையத்திலும் மகாவிஷ்ணு மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் மனதைப் புண்படுத்தும் வகையில் பேசியதாக சிபிஎம் கட்சியைச் சார்ந்த வில்சன் என்பவர் புகார் அளித்தார்.
இந்த சூழலில் மகாவிஷ்ணு ஒரு வீடியோவை வெளியிட்டார். "நான் எங்கும் ஓடவில்லை. தலைமறைவாகவில்லை. ஆஸ்திரேலியாவில் இருக்கிறேன். நாளை (இன்று) மதியம் 1 மணியளவில் சென்னை ஏர்போர்ட்டிற்கு வருவேன். இப்போதைய சூழலில் இந்தியாவில் இருப்பதையே விரும்புகிறேன். சென்னை திரும்பியவுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சந்தித்து இதுகுறித்து உரிய விளக்கம் அளிப்பேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கியவுடன் மகாவிஷ்ணுவை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.