1. Home
  2. தமிழ்நாடு

நாளை தொடங்குகிறது மகாளய பட்சம் காலம்..!

1

மகாளய பட்சம் என்பது ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் 14 நாட்கள் கடைபிடிக்கும் விரதமாகும். இந்த 15 நாட்களும் பித்ரு தர்ப்பணம் செய்ய ஏற்ற நாட்கள். சுபகாரியத் தடை, மகப்பேறின்மை, தொடரும் விபத்துக்கள், தீராத நோய் இவற்றுக்கெல்லாம் பித்ரு தோஷமும் ஒரு முக்கிய காரணமாகும். பித்ரு தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த மகாளய பட்ச காலத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து அவர்களது ஆசியை பெறலாம்.

புரட்டாசியில் வரும் அமாவாசையே மகாளய அமாவாசை எனப்படும். மஹாளய பட்சம் ஆரம்பிக்கும் நாளன்று நம் முன்னோர்களை அவரவர்கள் விருப்பமான இடத்திற்கு சென்று வரும்படி அனுமதிப்பாராம். நம் முன்னோர்களுக்கு விருப்பமான இடம் அவர்கள் பிறந்து வளர்ந்த வீடுதானே. எனவேதான் மஹாளய பட்சமான பதினைந்து நாட்களும் நமது முன்னோர்கள் நம் இல்லத்திற்கு வந்து நம்முடன் தங்கியிருப்பார்கள் நம்பிக்கை. நமது வீட்டிற்கு வரும் விருந்தினர்களாக வரும் முன்னோர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்க வேண்டும். இந்த பதினைந்து நாட்களும் நம் வசிப்பிடத்தை சுத்தமாக வைத்திருந்து நம் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் நம்முடைய வாழ்க்கை விருத்தியடைவது உறுதி.

மகாளய பட்சமான பிரதமைத் தொடங்கி 15 நாட்களில் ஒருமுறையும் மகாளய அமாவாசை தினத்தில் ஒருமுறையும் தர்ப்பணம் செய்ய வேண்டும். மகாளய பட்ச காலத்தில் மஹாபரணி,மத்யாஷ்டமி, வியாதிபாதம், வைதிருதி, ஷடசீதி ஆகிய நாட்களில் விஷேசமாகத் தர்ப்பணம் செய்யலாம். இந்த நாட்களில் தர்ப்பணம் தர முடியாதவர்கள் மகாளய பட்ச காலத்தில் ஏதாவதொரு நாளில் தர்ப்பணம் கொடுப்பது சிறப்பு. மகாளய பட்ச காலத்தில் நாம் கொடுக்கும் தர்ப்பணத்திற்கான நமது முன்னோர்கள் காத்துக்கொண்டிருப்பார்கள் என்பது ஐதீகம். மகாளய பட்ச காலத்தில் வீடு தேடி வரும் முன்னோர்களுக்காக நாம் திதி தர்ப்பணம் அளிக்க வேண்டும். இதன் மூலம் நமது முன்னோர்களின் ஆசி கிடைக்கும்.

மகாளய பட்ச காலத்தில் தர்ப்பணம் கொடுப்பதால் தோஷங்கள் நீங்கி நமது தலைமுறையும் செழிக்கும் என்பது நம்பிக்கை. இந்த மஹாளயபட்ச தினங்களாகிய பதினைந்து நாட்களிலும் பித்ரு தேவதைகள் எமதர்மனிடம் விடைபெற்றுக்கொண்டு தங்கள் குடும்பத்தினருடன் தங்கி விடுவர் என்பர். எனவேதான் இந்த நாட்களில் அவர்கள் பசியாற அன்னமாகவோ அல்லது எள்ளும் தண்ணீருமாகவோ அளிக்க வேண்டும். முறைப்படி தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள் அரிசி, வாழைக்காய், தட்சிணை போன்றவற்றைக் கொடுத்தாவது பித்ருக்களை மஹாளயபட்சத்தில் திருப்தி செய்ய வேண்டும். நம் முன்னோர்கள் நம்மை ஆசிர்வாதித்தப் பின்னர்தான், அம்பாளே நம் வீட்டிற்கு வருகிறாள் எனில்,பித்ரு பூஜையின் மகிமையை புரிந்து கொள்ளலாம்.

மஹாளயபட்சத்து அமாவாசை அன்று பிரபஞ்சத்தின் அண்டவெளியில் மிக அபரிதமான பித்ருக்களின் ஆசி இருக்கிறது. நாம் அளிக்கும் நீரையும் எள்ளையும் தேடி கோடானுகோடி பித்ருக்கள் பூமிக்கு வருவார்கள். அவர்கள் மனம் திருப்தியடையும் வகையில் அன்னதானம் தர வேண்டும். ஒரு புரட்டாசி அமாவாசையன்று அன்னதானம் செய்தால், பதினான்கு ஆண்டுகள் பித்ரு தர்ப்பணம் செய்தமைக்கான புண்ணியம் நம்மை வந்து சேரும். இது எதுவும் முடியாதவர்கள் நமது ஊரில் இருக்கும் பழமையான கோவிலில் இருக்கும் பசுவுக்கு வாழைப்பழங்கள் அளிக்கவேண்டும். பசுவுக்கு அகத்திக்கீரை, பழங்கள் இவற்றை வாங்கித் தரலாம்.

இந்த ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி துவங்கி அக்டோபர் 2 ம் தேதி மகாளய அமாவாசை உடன் முடிவடைகிறது .மேலும் இந்த வழிபாட்டை ஸ்ரீ மகாவிஷ்ணு ராம அவதாரத்திலும்  ,கிருஷ்ண அவதாரத்திலும் பிதிர்  பூஜை செய்து முன்னோர் வழிபாடு செய்ததாக புராணங்கள் கூறுகின்றது. மகாளய பட்ச காலத்தில்  நம் முன்னோர்கள் தன் சந்ததியினரை காண வருவதாக கூறப்படுகிறது .அப்படி வரும்போது தர்ப்பணம் செய்யாவிட்டால் அவர்கள் மனம் வருந்தி அது சாபமாக மாறி நம்மை பாதிப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றது.

முன்னோர்களுக்கு மிகவும் பிடித்தது எள்ளும்  தண்ணீரும் இரைக்கும்  முறையாகும் . இதுவே தர்ப்பணத்தில் மிக எளிமையான தர்ப்பணம் ஆகும் .இந்த 15 நாட்களும் தர்ப்பணம் செய்து பசியோடு இருப்பவர்களுக்கு ஒருவருக்காவது உணவு வழங்கினால் வீட்டில்  வறுமை நீங்கும். குறிப்பாக பரணி நட்சத்தில் வரும் நாளில் செய்வது சிறப்பாக கூறப்படுகிறது.

ஏனெனில் பரணி நட்சத்திரத்தின்  அதி தேவதையாக விளங்குபவர் எமதர்மராஜா. அந்த நாளில் வழிபாடு செய்தால் 15 நாட்கள் வழிபாடு செய்த பலன் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது .செப்டம்பர் 21  அன்று பரணி நட்சத்திரம் வருகின்றது.

மேலும் ஒவ்வொரு திதிக்கும்  ஒவ்வொரு பலன்கள் கிடைக்கும் என்றும்  சாஸ்திரத்தில் கூறப்படுகிறது.

  • பிரதமை= பணம் சேரும்.
  • துவதியை=  குழந்தை பாக்கியம் கிடைக்கும் .
  • திருதியை =நினைத்தது நடக்கும்.
  • சதுர்த்தி= பகை விலகும்.
  • பஞ்சமி =சொத்து சேரும்.
  • சஷ்டி= புகழ் சேரும்
  • சப்தமி =பதவி உயர்வு கிடைக்கும்.
  • அஷ்டமி =சமயோகித  புத்தி பெறலாம்.
  • நவமி= பெண் குழந்தை பிறக்கும்,திருமண தடை விலகும்.
  • தசமி = ஆசை நிறைவேறும்
  • ஏகாதசி =படிப்பு மற்றும் கலையில்  வளர்ச்சி கிடைக்கும்.
  • துவாதசி= நகை அணிகலன்கள் சேரும் .
  • திரயோதசி =விவசாயம் செழிக்கும், ஆயுள் ஆரோக்கியம் கூடும்.
  • சதுர்தசி= பாவம் நீங்கி புண்ணியம் சேரும்.

மகாலய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால் 15 நாட்கள் செய்ய முடியாத தர்ப்பணம் செய்த  பலன் கிடைக்கும். மேலும் இந்த 15 நாட்களும் மாலையில் முன்னோர்களுக்கு நல்லெண்ணெய் விளக்கேற்றி வழிபாடு  செய்து பசியோடு இருக்கும் ஒருவருக்காவது தானம் கொடுக்க வேண்டும். 

Trending News

Latest News

You May Like