வெகு விமர்சையாக நடந்த நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம்..!

நாமக்கல் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் கடந்த 2009-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 13 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்காக ரூ. 67 லட்சம் மதிப்பீட்டில் கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன.
இதையொட்டி கடந்த 30-ம் தேதி மாலை முதல் யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் 12.30 மணி வரை வருண தீர்த்தம் புனிதப்படுத்ததுல், அக்னி பகவான் பூஜை, தமிழ் திவ்ய பிரபந்த வேள்வி, அனுதின வேள்வி ஆகிய பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து 10.45 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதலும், மாலை பிம்ப வாஸ்து, மஹா சாந்தி வேள்வியை நிறைவு செய்தல், ஒன்பது கலச திருமஞ்சனம், கங்கணம் கட்டுதல் உள்ளிட்ட நடைபெற்றன. இதையடுத்து நேற்று காலை 7.15 மணிக்கு வருண தீர்த்தம், புனிதபடுத்துதல் அனுதின ஹோமம், தமிழ் திவ்ய பிரபந்த வேள்வியும், காலை 9.10 மணிக்கு யாத்ராதானம், கும்பப்ராயணம் பூஜையும் நடைபெற்றது.
அதை தொடர்ந்து நேற்று காலை 10 மணிக்கு கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது. இதில் வனத்துறை அமைச்சர் மா. மதிவேந்தன் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட கலெக்டர் உள்படஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.