1. Home
  2. தமிழ்நாடு

யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்தது மதுரை உயர்நீதிமன்றம்..!!

யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்தது மதுரை உயர்நீதிமன்றம்..!!


மதுரை சூர்யா நகர் பகுதியை சேர்ந்தவர் மாரிதாஸ் (வயது 43). இவர் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் பாஜகவுக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

இவர் திமுக, பெரியாரிய இயக்கங்கள், இடதுசாரி இயக்கங்கள், ஊடகங்களை விமர்சித்துக் கடுமையான கருத்துகளை சமூக ஊடகங்களில் பதிவேற்றிவருகிறார். இவர் வெளியிட்ட வீடியோக்களும் கருத்துகளும் அரசியல் அரங்கில் பலமுறை சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றன.

இந்தநிலையில் கடந்த 8-ம் தேதி குன்னூரில் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் பாதுகாப்பு படை தலைவர் பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. அதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த கோர சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது.

இந்த சம்பவத்தை மேற்கோள்காட்டி தமிழ்நாடு அரசின் சட்டம், ஒழுங்கை அவதூறு செய்யும் வகையில், காஷ்மீருடன் ஒப்பிட்டு மாரிதாஸ் பதிவிட்டிருக்கும் ட்வீட் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

இந்த நிலையில் திமுக ஆட்சி குறித்தும், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையிலும் சர்ச்சை கருத்தை பதிவிட்டிருந்ததாக மாரிதாஸ் மீது டி.வி.எஸ். நகரை சேர்ந்த வக்கீல் ராமசுப்பிரமணின், மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு புகார் அளித்தார். அதன் பேரில் நடவடிக்கை எடுக்க புதூர் போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.

பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் மாரிதாஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதை தொடர்ந்து மாரிதாஸ் வீட்டிற்கு சென்று அவரிடம் வழக்கு குறித்த விவரங்களை தெரிவித்து கைது செய்வதாக தெரிவித்தனர். பின்னர் புதூர் போலீசார் அவரை கடந்த வாரம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதை எதிர்த்து மாரிதாஸ், மதுரை உயர்நீதிமன்றத்தில் தன்னை இந்த வழக்கில் இருந்து விடுவிக்கும்படி மனு தாக்கல் செய்தார் . அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது,

“நான் சமூக சிந்தனையுடன் பல்வேறு விஷயங்கள் தொடர்பான ஆவணங்களை சேகரித்து அதுசம்பந்தமான பொதுவான எனது கருத்துகளை பேஸ்புக், ட்விட்டர், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறேன். இந்தநிலையில் கடந்த 9-ந்தேதி இந்திய முப்படைத்தளபதி இறந்தது குறித்து யாரும் தேவையின்றி கருத்துகளை பதிவிட வேண்டாம் என ட்விட்டரில் தெரிவித்தேன்.

இதுதொடர்பான புகாரின்பேரில் போலீசார் என் மீது வழக்குபதிவு செய்து கைது செய்துள்ளனர். என் மீது வழக்குப்பதிவு செய்வதிலும், கைது நடவடிக்கையிலும் சட்டத்தை பின்பற்றவில்லை. எனவே என் மீதான வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்.” என்று தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு மதுரைஉயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி வழக்கு விசாரணையை இன்று ஒத்திவைத்தார் .

இந்நிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று நடைபெற்றது. அப்போது மாரிதாஸ் மீது வழக்கு பதிந்தது செல்லாது என கூறிய நீதிபதி ,யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Trending News

Latest News

You May Like