கொட்டித் தீர்த்த மழையால் வெள்ளக்காடான மதுரை... குடியிருப்புகளில் வெள்ளநீர் புகுந்தது..!
மதுரை நகரில் தொடர் கனமழை காரணமாக கண்மாய்கள் நிரம்பி வழிகின்றன. கண்மாய்களில் இருந்து வெளியேறும் தண்ணீர் பந்தல்குடி கால்வாய் வழியாக குடியிருப்புக்குள் நுழைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதே போல் ஆணையூர் உழவர் சந்தையிலும் மழைநீர் புகுந்துள்ளது. அங்குள்ள காய்கறிகள் மழைநீரில் அடித்து செல்லப்பட்டன.
மதுரை - நத்தம் மேம்பாலத்தின் கீழ செல்லும் சாலையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்ததால் வாகனங்கள் தத்தளித்தன. ஆனையூர், ஊமச்சிக்குளம், ஆலங்குளம், கண்ணனேந்தல், மூன்றுமாவடி சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்து வாகனங்கள் பல கி.மீ. வரிசையாக நின்றன.ஒரே நேரத்தில் கொட்டி தீர்த்த மழையால் அனைத்து துறை அதிகாரிகளும் செய்வதறியாமல் திகைத்தனர்.
மதுரையின் மையப்பகுதியான கோரிப்பாளையம், தெற்குவாசல், தல்லாகுளம், மாவட்ட நீதிமன்றம், கேகே நகர், அண்ணாநகர் பகுதிகளில், ரோட்டில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாட்டுத்தாவணி மற்றும் பெரியார் பேருந்து நிலையத்திலும், மழைநீர் தேங்கியுள்ளது.
இந்த மழையால் மதுரையில் சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மணிநகரம் ரயில்வே பால சுரங்கப்பாதை பாதுகாப்புக் காரணமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பகுதியில் தடுப்புக் கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களுக்கு முதல்வர் உத்தரவு: கனமழையால் மதுரையின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோரிடம் மீட்பு பணிகள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.
உடனடியாக களத்திற்கு சென்று சீரமைப்புப் பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
#Watch | மதுரையில் பெய்த தொடர் மழை காரணமாக செல்லூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் தண்ணீர் புகுந்தது!#SunNews | #MaduraiRains | #TNRains pic.twitter.com/vySN9T2kUT
— Sun News (@sunnewstamil) October 25, 2024