மதுரை அமெரிக்கன் கல்லூரியின் முதல்வர் தவமணி பணியிடை நீக்கம்..!

மதுரையின் நூற்றாண்டு பெருமை வாய்ந்த தமிழ்நாட்டின் மிகப் பழமையான கல்வி நிறுவனங்களுள் ஒன்று அமெரிக்கன் கல்லூரி (The American College). தி அமெரிக்கன் மதுரா மிஷன் என்ற அமைப்பால் 1881 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த கல்லூரி, மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்களின் கல்வி சரணாலயமாக திகழ்ந்து வருகிறது. ஹெச்சிஎல் நிறுவனர் சிவ நாடார், அரவிந்த் கண் மருத்துவமனை நிறுவனர் வெங்கடசாமி, நடிகர் விவேக் உள்ளிட்ட பல்வேறு ஆளுமைகள் இந்த கல்லூரியில் பயின்றவர்கள்.
இந்த நிலையில் அமெரிக்கன் கல்லூரியின் தற்போதைய முதல்வர் முனைவர் தவமணி கிறிஸ்டோபர் மீது ஊழல் புகார்கள் எழுந்தன. இது தொடர்பான வழக்குகளும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்குநரகம் தவமணி கிறிஸ்டோபரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட உத்தரவில், “தவமணி கிறிஸ்டோபர் வருமானத்திற்கும் அதிகமான சொத்துக்கள் சேர்த்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் (DVAC) விசாரணை நடந்தி வருகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு, தனியார் கல்லூரி விதிகள் 19 (3)-ன் கீழ் இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது“ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றுடன் (மே 31) அமெரிக்கன் கல்லூரி முதல்வர் பதவியில் இருந்து தவமணி கிறிஸ்டோபர் ஓய்வு பெறும் நிலையில், ஒரு நாள் முன்னதாக தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்குநரகம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, கல்லூரியின் மூத்த பேராசிரியர் டாக்டர் கண்ணபிரான், நேற்று (மே 30) முதல் புதிய முதல்வராக (பொறுப்பு) பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.