கோலாகலமாக நடந்த மதுரை அ.தி.மு.க. மாநாடு : தொண்டர்கள் வெள்ளத்தால் திணறிய வலையங்குளம்..!

மதுரையில் ஆகஸ்ட் 20-ம் தேதி அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெறும் என்று மூன்று மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த மாநாட்டுக்கான இடமாக வலையங்குளம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றன. முதலில் மாநாடு இடத்தை சமன் செய்யும் பணி நடைபெற்றது.
அதன் பிறகு பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணி நடந்தது. அதை தொடர்ந்து கட்சியின் நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர்., அவரது வழிவந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரது உருவம் பொறித்த பிரம்மாண்ட மாநாட்டு முகப்பு அரண்மனை வடிவில் அமைக்கப்பட்டது. மாநாட்டு பணிகளை முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜூ, ஆர்.பி. உதயகுமார் மற்றும் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் கடந்த பல வாரங்களாக இரவு, பகல் பாராமல் செய்து வந்தனர்.
இந்த நிலையில்தான் நேற்று மதுரை வலையங்குளத்தில் அ.தி.மு.க. மாநாடு திட்டமிட்டபடி தொடங்கியது. முன்னதாக நேற்று முன்தினமே கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரை வந்து சேர்ந்தார். அவருக்கு அப்போது கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். நேற்று காலை 8 மணியளவில் மாநாடு நடந்த மேடைக்கு எடப்பாடி பழனிசாமி திறந்த வேனில் ஊர்வலமாக வந்தார். அவருக்கு பின்னால் பல்வேறு கார்கள் அணிவகுத்து வந்தன.
மாநாட்டு பகுதியை அவர் நெருங்கிய போது ஹெலிகாப்டரில் இருந்து ஒரு டன் பன்னீர் ரோஜா மலர்களை தூவி அவருக்கு மேளம் தாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த வரவேற்பை இன்முகத்துடன் ஏற்றுக் கொண்ட எடப்பாடி பழனிசாமி மாநாட்டு முகப்பில் காஞ்சிபுரத்தில் பிரத்யேகமாக நெய்யப்பட்ட கட்சிக் கொடியை 51 அடி உயர கொடிக்கம்பத்தில் ஏற்றினார்.
அதாவது முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். 1972-ல் அ.தி.மு.க.வை தொடங்கினார். அதன்படி 50 ஆண்டுகள் முடிந்து 51-வது ஆண்டில் அ.தி.மு.க. அடியெடுத்து வைப்பதை குறிக்கும் வகையில் 51 அடி உயர கம்பத்தில் கொடியேற்றினார் எடப்பாடி பழனிசாமி.
அதன் பிறகு அவருக்கு திருச்செந்தூரில் இருந்து கொண்டு வரப்பட்ட இரட்டை இலை சின்னம் பொறித்த ஐந்தரை அடி உயர வெள்ளி செங்கோல் வழங்கப்பட்டது. சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்ட ஜோதியும் ஒப்படைக்கப்பட்டது. இதை தொடர்ந்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரது ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள், சாதனைகள் குறித்த சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை எடப்பாடி பழனிசாமி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பார்வையிட்டார்.
இந்த மாநாட்டை முன்னிட்டு தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு 2 லட்சம் கிலோ அரிசி, 20 ஆயிரம் கிலோ காய்கறிகளை கொண்டு சமைக்கப்பட்ட உணவு 300 கவுண்டர்கள் மூலம் சுடச்சுட வழங்கப்பட்டது. இந்த மாநாட்டை முன்னிட்டு அந்த பகுதியில் உள்ள டீக்கடைகள் தொண்டர்களால் நிரம்பி வழிந்தன. மாநாட்டில் எம்.ஜி.ஆர். வேடமணிந்து தொண்டர்கள் பாட்டுப் பாடி நடனமாடினர். இதயக்கனி படத்தில் வரும் உழைக்கும் தோழர்களே ஒன்றுகூடுங்கள், உலகம் நமது என்று சிந்து பாடுங்கள் என்று எம்.ஜி.ஆர். பாடும் பாடலை பாடி தொண்டர்கள் நடனமாடினர்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் ஒயிலாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. இதையெல்லாம் தொண்டர்கள் கண்டு ரசித்தனர். மாநாட்டை முன்னிட்டு தொண்டர்களுக்காக 7 இலவச மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு தொண்டர்களின் ரத்த அழுத்தம் உள்ளிட்டவை சோதித்து பார்க்கப்பட்டது.
மாலையில் நடந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் அ.தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கி பேசினார்கள். மாலை 4.30 மணியளவில் மீண்டும் மாநாட்டு மேடைக்கு வந்தார் எடப்பாடி பழனிசாமி. அப்போது அவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அ.தி.மு.க. பொன்விழா மாநாட்டின் சிறப்பு மலரையும் அப்போது அவர் வெளியிட்டார். இந்த மாநாட்டில் மொத்தம் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இறுதியில் கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் அ.தி.மு.க. அரசின் சாதனைகளையும், தி.மு.க. அரசின் வேதனைகளையும் பட்டியலிட்டு பேசினார். இந்த மாநாட்டை முன்னிட்டு அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடியார் ஆகியோரது பிரம்மாண்ட கட்அவுட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. முன்னதாக இந்த மாநாட்டுக்கு வந்திருந்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தனது காரை ஒரு ஓரமாக நிறுத்தி சாலையோரத்தில் தனது உதவியாளர்களுடன் சாப்பிட்ட காட்சி வைரலாகியது. மொத்தத்தில் இந்த மாநாடு மூலம் மதுரை நகரமே களைகட்டியது.