1. Home
  2. தமிழ்நாடு

தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி..! நேரடி ஒளிபரப்பு செய்வதில் என்ன பிரச்சினை..?

1

சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உத்தரவிடக் கோரி மறைந்த தே.மு.தி.க. தலைவர் மறைந்த விஜயகாந்த் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.கே.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, விஜயகாந்த் மரணமடைந்த விவரம் குறித்து வழக்கறிஞர் வி.டி. பாலாஜி நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தார். மேலும், அவரது சட்டபூர்வமான பிரதிநிதி மூலம் வழக்கை தொடர்ந்து நடத்த இருப்பதாக தெரிவித்தார்.

அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “தற்போது தமிழக சட்டமன்றத்தில் கேள்வி நேரம், கவன ஈர்ப்பு தீர்மானங்கள் மீதான விவாதங்கள், கவர்னர் உரை, பட்ஜெட் உரைகள், அமைச்சர்களின் பதிலுரைகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

சட்டமன்றத்தில் உறுப்பினர்களின் பேச்சுக்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும்போது, அவை நேரடியாக ஒளிபரப்பப்பட வாய்ப்புள்ளது. இதனால், சபை நடவடிக்கைகள் முழுவதையும் நேரடியாக ஒளிபரப்பு செய்ய இயலாது. இந்த வழக்கில் ஒரு மனுதாரராக உள்ள எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்தபோது, பேரவை நிகழ்வுகளை ஒளிபரப்பவில்லை. தற்போது ஆட்சி மாற்றத்துக்கு பிறகு பேரவை நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்ப வேண்டுமென வலியுறுத்துகிறார்” என்று வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “பாராளுமன்றத்தில் அனைத்து நடவடிக்கைகளும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. தமிழக சட்டமன்ற நடவடிக்கைகள் முழுவதையும் நேரடி ஒளிபரப்பு செய்வதில் என்ன பிரச்சினை உள்ளது?” என கேள்வி எழுப்பினர். பின்னர், இது குறித்து அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Trending News

Latest News

You May Like