1. Home
  2. தமிழ்நாடு

மாசி மகம்! கும்பகோணத்தில் நாளை தீர்த்தவாரி!

மாசி மகம்! கும்பகோணத்தில் நாளை தீர்த்தவாரி!

மாசி மகம் திருவிழா கும்பகோணத்தில் உள்ள சிவன் மற்றும் பெருமாள் கோவில்களில் கோலாகலத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அங்குள்ள ஆதிகும்பேசுவரர் கோயில், காசி விசுவநாதர் கோயில், காளகஸ்தீசுவரர் கோயில், அபிமுகேசுவரர் கோயில், சோமேசுவரர் கோயில், கௌதமேசுவரர் கோயில் ஆகியவற்றில் மாசி மக விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதே போல, சக்கரபாணி கோயில், ராஜகோபாலசுவாமி கோயில், ஆதிவராக பெருமாள் கோயில்களிலும் விழா நடைபெறுகிறது. நாளை மார்ச் 8ம் தேதி மகாமகம் குளத்தில் தீர்த்தவாரி நடைபெறுகிறது.

மகத்தில் பிறந்தவர் ஜெகத்தை ஆள்வார்கள் என்பது ஜோதிட வாக்கு. எல்லா மாதத்திலும் மகம் நட்சத்திரம் வந்தாலும் மாசி மாதம் வரும் மகம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்நாளில் தான் உமா தேவியார் தக்க்ஷனின் மகளாக அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. தக்‌ஷனின் தவத்தை மெச்சிய சிவன் அவன் முன்தோன்றி அவன் கேட்ட வரத்தை வழங்கினார். உமா தேவியாரும் தக்சனுக்கு மகளாகப் பிறந்தார். இறைவியே மகளாக பிறக்க அந்த குழந்தைக்கு தாட்சாயிணி என பெயரிட்டு வளர்த்து சிவபெருமானுக்கு திருமணம் செய்து வைத்தார். இறைவன் அவதார தினம் என்பதால் மாசி மகம் மகத்துவம் பெற்றது.

மாசி மாதம் மக நட்சத்திரத்துடன் இணைவது மாசிமகமாகத் திகழ்கிறது. சிவன், விஷ்ணு, முருகன் ஆகிய மூவருக்கும் கோயில்களில் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். மக நட்சத்திரத்திற்கு அதிபதியான கேது பகவான் ஞானத்தையும் மோட்சத்தையும் அருளக்கூடியவர். கோடீஸ்வர யோகத்தையும் வழங்கக்கூடிய வல்லமை உள்ளவர். மாசி மாதத்தில் கேதுவின் நட்சத்திரமான மக நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சரிக்க அப்போது சிம்ம ராசி நாதன் சூரியன், கும்ப ராசியில் இருந்து நேரடியாக சந்திரனை பார்க்கும் காலம் மாசி மகம்.

மோட்சத்தை அருளக் கூடிய கேதுபகவான் நட்சத்திரமாக மகத்தில் இந்த நாள் அமைகிறது. இதனை கடலாடும் நாள் என்றும் தீர்த்தமாடும் நாள் என்றும் சொல்வார்கள். இந்நாளில் விரதம் இருந்து குலதெய்வம், இஷ்ட தெய்வங்களை வணங்கி பலவிதமான தானம் செய்யலாம். தானம் செய்வதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமையும் சகல தோஷங்களும் நீங்கும். மாசி மகம் நாளில் கும்பகோணத்தில் தீர்த்தவாரி திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு மாசி மகம் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.

ஆண்டுதோறும் மாசி மாத மக நட்சத்திரத்தன்று மாசி மக விழா கொண்டாடப்படுவது வழக்கம். இதுவே, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக விழாவாகக் கொண்டாடப்படுகிறது. கும்பகோணத்தில் மகாமகம் தொடர்புடைய 12 சிவன் கோயில்களிலும், 5 பெருமாள் கோயில்களிலும் மாசி மக விழா கொண்டாடப்படும்.

newstm.in

Trending News

Latest News

You May Like