மச்சி.. உன் காதலி சரியில்லடா என கூறியதால் தகராறு.. போதையில் நண்பனை போட்டுதள்ளிய இளைஞர் !

நெல்லை வண்ணாரப்பேட்டையில் இசக்கி பாண்டி - முப்பிடாதி தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களின் மகன் இசக்கி துரையை கடந்த 6ஆம் தேதி முதல் காணவில்லை என போலீசில் புகார் அளித்தனர்.
புகார் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், முதல்கட்டமாக இசக்கி துரையின் நண்பர்களான மனோஜ் மற்றும் ஆதி நாராயணன் ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அப்போது கடந்த சில நாட்களாக இருவரும் இசக்கி துரையை பார்க்கவில்லை என கூறினர்.
ஆனால், பைக்கில் சென்று கல்லிடைக்குறிச்சி போலீசாரிடம் சிக்கியதும், உரிய ஆவணங்கள் இல்லாததால் பைக் பறிமுதல் செய்யப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, கல்லிடைக்குறிச்சி பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் மாயமான இசக்கி துரை, மனோஜ் மற்றும் ஆதி நாராயணனுடன் இரு சக்கர வாகனத்தில் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன.
இதையடுத்து, மனோஜ், ஆதி நாராயணன் ஆகியோரை பிடித்து சிசிடிவி காட்சிகளை காட்டி விசாரணை நடத்தினர். வசமாக சிக்கிக் கொண்டதை உணர்ந்த இருவரும் இசக்கி துரைக்கு நடந்தது என்ன என்பதை கூறினர். சம்பவத்தன்று, கல்லிடைக்குறிச்சி தாமிரபரணி ஆற்றங்கரை பகுதிக்குச் சென்று இசக்கி துரை, ஆதி நாராயணன், மனோஜ் ஆகிய மூவரும் மது அருந்தியுள்ளனர்.
அப்போது இசக்கிதுரை காதலிக்கும் பெண் குறித்து ஆதி நாராயணன் தவறான பேசியுள்ளார். அந்த பெண் சரியில்லை என்பதால் மறந்து விடுமாறு ஆதி நாராயணன் கூறியப்போது, இசக்கி துரை சண்டை போட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
மது போதையில் கடுமையாக தாக்கிக்கொண்டதில் இசக்கி துரை உயிரிழந்தது இருவருக்கும் தெரிய வந்துள்ளது. இருவரும் உடலை அப்பகுதியில் உள்ள கிழங்கு தோட்டத்திற்குக் கொண்டு சென்று கிழங்கு செடிகளால் மூடி விட்டு அங்கிருந்து வாகனத்தில் சென்றிருக்கின்றனர். அப்போது தான் அவர்கள் வாகனம் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
இதையடுத்து, ஆதி நாராயணன் மற்றும் மனோஜை கைது செய்த பாளையங்கோட்டை போலீசார், இருவரையும் அழைத்துக்கொண்டு சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று இசக்கி துரையின் சடலத்தைக் கைப்பற்றினர். காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவர் நண்பர்களாலேயே அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
newstm.in