அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட கிருஷ்ணர் சிலை மீட்பு..!

குழந்தை கிருஷ்ணரின் உலோகச்சிலை மீட்கப்பட்டதாக மாநில சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.
பாம்பின் மீது குழந்தை கிருஷ்ணர் நடனமாடுவது போல் இந்தச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.கடந்த காலங்களில் தமிழகத்தில் இருந்து நூற்றுக்கணக்கான அரிய வகை சிலைகள் பல்வேறு நாடுகளுக்குக் கடத்தப்பட்டுள்ளன. அவற்றை மீட்பதற்கான நடவடிக்கைகளைச் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 2008ஆம் ஆண்டு இணையத்தளம் ஒன்றில் வெளியான கட்டுரை ஒன்றில், தமிழகத்தைச் சேர்ந்த கடவுள் சிலை ஒன்று இடம்பெற்றிருந்தது.
இதே போல் தாய்லாந்தைச் சேர்ந்த ஒருவர் இணையத்தில் வெளியிட்ட கட்டுரையில் குழந்தை கிருஷ்ணரின் சிலை காணப்பட்டது.
இரு கட்டுரைகளிலும் இடம்பெற்றிருந்த சிலை, தமிழகத்தில் உள்ள கோவிலுக்குச் சொந்தமானது என்பதை உறுதி செய்துகொண்டு அதை மீட்கும் பணி தொடங்கியது.
சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட தொடர் விசாரணையின்போது, தாய்லாந்தைச் சேர்ந்த ஒருவர் உலக அளவில் சட்ட விரோதமாக சிலைகளை வாங்கி விற்பனை செய்வது தெரிய வந்தது.
மேலும் டக்ளக் லாட்ச் போர்ட் என்பவர் சிலைக்கடத்தல் மன்னன் என்று வர்ணிக்கப்படும் சுபாஷ் சந்திரகபூர் என்பவரிடம் இருந்து, ரூ.5.20 கோடிக்கு கிருஷ்ணர் சிலை வாங்கியுள்ளார். இச்சிலை பிற்கால சோழர்காலமான 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனத் தெரிய வந்துள்ளது. அந்தச் சிலை தாய்லாந்து வழியாக அமெரிக்காவுக்கு கடத்தப்பட்டதும் அம்பலமானது.
இந்நிலையில், அமெரிக்காவுக்குச் சென்ற இந்திய குழு, கிருஷ்ணர் சிலையை மீட்டு தாய்லாந்துக்கு கொண்டுசென்றது. அச்சிலை விரைவில் தமிழகத்துக்கு கொண்டு வரப்படும் எனக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.