அடேங்கப்பா எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க..! வாஷிங் மிஷினில் கட்டுக்கட்டாக பணம் கடத்தல்!
விசாகப்பட்டினம் விமான நிலைய போலீஸார் என்.டி.ஏ சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுப்பட்டு வந்தனர். அப்போது, சரக்கு ஆட்டோ ஒன்றில் புதிய வாஷிங் மிஷன்கள் கொண்டு செல்வதை பார்த்த போலீஸார் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது 6 வாஷிங் மிஷின் புதியதாக சீல் பிரிக்காமல் காணப்பட்டது. இதுகுறித்து போலீஸார் டிரைவரிடம் விசாரனை செய்ததில் விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடா கொண்டு செல்வதாக கூறினார்.
விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடாவுக்கு வாஷிங் மெஷின்கள் ஆட்டோவில் அவ்வளவு தூரம் கொண்டு செல்லப்படுமா, ஆட்டோவில் ஒரு கடையில் இருந்து இன்னொரு கடைக்கு மட்டுமே கொண்டு செல்வார்கள் என்பதால் சந்தேகமடைந்த போலீஸார் ஆட்டோவில் இருந்த ஒரு வாஷிங் மிஷினை இறக்கி சோதனை செய்தனர். இதில் கரன்சி நோட்டு மூட்டைகளை வைத்து ஆட்டோவில் கொண்டு செல்வது தெரிய வந்தது.
இதனையடுத்து ஆட்டோவில் இருந்த 6 வாஷிங் மிஷன்களை கீழே இறக்கி சோதனை செய்ததில் ரூ.1.30 கோடி மதிப்புள்ள ரொக்கம் பணம், 30 புதிய செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இவை அனைத்தும் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமிற்கு சொந்தமானது என தெரிய வந்தது. அதன் பிறகு போலீஸார் அந்த கடை உரிமையாளரிடம் விசாரித்ததில் தசரா விற்பனையில் கிடைத்த பணத்தை விஜயவாடாவில் உள்ள வங்கியில் டெபாசிட் செய்ய எடுத்து செல்வதாக எலக்ட்ரானிக் கடை உரிமையாளர் விளக்கம் அளித்தார்.
ஆனால், எதற்காக இவ்வளவு பெரிய தொகையை அவ்வளவு தூரம் கொண்டு செல்ல வேண்டும் என்பது குறித்து கடை உரிமையாளர் உரிய விளக்கம் அளிக்காததால் பணத்தை பறிமுதல் செய்த போலீஸார், இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.