லண்டன் ஸ்டைலில் சென்னை சாலையில்.. போலீஸ் களமிறக்கிய புது கார்கள்..!

சென்னை காவல்துறை தற்போது நிர்வாக வசதிகளுக்காக சென்னை, தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்கள் என்று மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகத்திற்கு சிறப்பு அதிகாரிகளாக ரவி, சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு இருந்தனர். தற்போது அவர்களே இரண்டு ஆணையரகத்திற்கும் கமிஷனர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு ஆணையரகத்திற்கும் புதிய தரத்தில் ஆயுதங்கள், தற்காப்பு கவசங்கள், வாக்கி டாக்கிகள் வாங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. முக்கியமாக, போலீஸ் வாகனங்கள் புதிய தோற்றத்தோடு, அதிக வசதிகள் கொண்ட வகையில் அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில், ஆவடி மற்றும் தாம்பரம் காவல் ஆணையகரத்திற்கு வாங்கப்பட்ட புதிய போலீஸ் ஜீப்கள் நேற்று சென்னை சாலைகளில் தென்பட்டது. எப்போதும் சென்னையில் காணப்படும் வெள்ளை நிற, நீல நிற அல்லது அடர் மெரூன் நிற கார்களுக்கு பதிலாக புதிய நிறத்தில் கார்கள் வாங்கப்பட்டு இருக்கின்றன.
நல்ல பொலிவான சிவப்பு நிறத்தில் மஞ்சள் கோடுகளோடு புதிய கார்கள் களமிறக்கப்பட்டு இருக்கிறது. பார்க்கவே வித்தியாசமான தோற்றத்தோடு இந்த கார்கள் அமைந்துள்ளன. இந்த கார்களில் ஆணையரக பெயர்கள் புதிய போல்ட் பார்மெட் எழுத்துக்களில் வித்தியாசமாக எழுதப்பட்டு இருக்கிறது.
பொதுவாக பல்வேறு வெளிநாடுகளில் இது போன்ற தோற்றம் கொண்ட கார்கள் பயன்படுத்தப்படும். முக்கியமாக லண்டனில் இதே சிவப்பு நிற கார்கள் போலீசார் மூலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. லண்டனில் பயன்படுத்தப்படும் அந்த சிவப்பு நிற கார்கள் உலகம் முழுக்க பிரபலம். இது அவசர ரோந்து பணிக்கு பயன்படுத்தப்படும் கார்கள்.
அதாவது அவசரமாக செல்ல வேண்டிய ரோந்து போலீஸ் கார்கள் இப்படி சிவப்பு நிறத்தில் இருக்கும். தற்போது ஆவடி, தாம்பரத்தில் இதே போன்ற சிவப்பு நிற கார்கள் களமிறக்கப்பட்டு உள்ளது.
போலீசாரின் ரோந்து பணிக்காக இந்த கார்கள் களமிறக்கப்பட்டு உள்ளது. இரண்டு ஆணையரகங்களுக்கும் 10 புதிய ரக ரோந்து வாகனங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்து வழங்க உள்ளார்.