1. Home
  2. தமிழ்நாடு

மக்களவை தேர்தல் : காலை 9 மணி நிலவரம் - அண்ணாமலை, ராதிகா பின்னடைவு..!

1

2024 மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி, 7 கட்டங்களாக நடைபெற்று ஜூன் 1ஆம் தேதி நிறைவு பெற்றது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.

மொத்தம் உள்ள 543 தொகுதிகளில், குஜராத்தின் சூரத் தொகுதியில் மட்டும் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மற்ற 542 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. மக்களவை தேர்தலில் 64 கோடியே 20 லட்சம் பேர் வாக்களித்ததாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் 39 தொகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. காலை 8:45 நிலவரப்படி கரூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி முன்னிலை வகிக்கிறார். அதிமுக வேட்பாளர் தங்கவேல் மற்றும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் செந்தில்நாதன் ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

நீலகிரி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆ.ராசா முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரும் மத்திய அமைச்சருமான எல்.முருகன், அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன், நாதக வேட்பாளர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பின்னடைவை சந்தித்துள்ளனர். நீலகிரி தொகுதியில் கடந்த 2009 மற்றும் 2019 மக்களவை தேர்தல்களில் வெற்றி பெற்று ஆ.ராசா இரண்டு முறை எம்.பி.யாக பதவி வகித்துள்ளார்.

 தமிழகத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தர்மபுரி, நெல்லை, மத்திய சென்னை ஆகிய மூன்று தொகுதிகளில் முன்னணி வகிக்கின்றன. தர்மபுரி தொகுதியில் போட்டுயிட்ட பாமகவின் சௌமியா அன்புமணி முதல் சுற்று முடிவில் முன்னிலை வகிக்கிறார். அதே போல நெல்லை, மத்திய சென்னை ஆகிய தொகுதிகளில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் மற்றும் வினோஜ் செல்வம் ஆகியோரும் முன்னிலை பெற்றிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழ்நாட்டில் விழுப்புரம், ஈரோடு ஆகிய இரண்டு தொகுதிகளில் அதிமுக கட்சி முன்னிலை வகித்து வருகிறது. அதன்படி விழுப்புரம் அதிமுக வேட்பாளர் பாக்கியராஜும், ஈரோடு வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் முன்னிலை வகித்து வருகின்றனர்.

விருதுநகர் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகை ராதிகா சரத்குமார் பின்னடைவை சந்தித்துள்ளார்.  ராதிகா மற்றும் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட விஜய பிரபாகரன் ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர். திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மாணிக்கம் தாகூர் முன்னிலையில் உள்ளார்.

நெல்லை தொகுதியில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் முன்னிலை வகித்து வருகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் ராபர்ஸ் ஃபுரூஸ், அதிமுக சார்பில் ஜான்சி ராணி, நாம் தமிழர் கட்சி சார்பில் சத்யா களத்தில் உள்ளனர்.

கோவை தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பின்னடைவை சந்தித்துள்ளார். அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனும் பின் தங்கியுள்ள நிலையில், திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முதல் சுற்று எண்ணிக்கையில் முன்னிலை வகித்து வருகிறார்.

 உத்தரபிரதேசம் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலை வகிக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் அஜய் ராய் பின் தங்கியுள்ளார்.

Trending News

Latest News

You May Like