'லிவ்- இன்' வாழ்க்கையை பலாத்காரம் என கூற முடியாது:சுப்ரீம் கோர்ட்..!

வங்கி அதிகாரி ஒருவரும், பேராசிரியை ஒருவரும், 16 ஆண்டுகள் ஒன்றாக லிவ் -இன் உறவில் வாழ்ந்த பின், இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. வேறு பெண்ணை திருமணம் செய்ய வங்கி அதிகாரி தீர்மானித்ததால், அவர் மீது பாலியல் வன்கொடுமை புகாரை பேராசிரியை அளித்தார்.
இதையடுத்து, வங்கி அதிகாரி மீது பாலியல் வழக்குப்பதிவு செய்து குற்ற நடவடிக்கை எடுக்குமாறு, கடந்த 2022ல் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வங்கி அதிகாரி மேல்முறையீடு செய்தார். அதை விசாரித்த நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அமர்வு, நீண்ட காலமாக லிவ் -இன் வாழ்க்கையில் இருந்த பெண், பாலியல் கொடுமைக்கு உள்ளானதாக கூறுவதை ஏற்க முடியாது என தீர்ப்பளித்தது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
திருமணம் செய்வதாக உறுதி அளித்து, 16 ஆண்டு காலம் பலாத்காரம் செய்தார் என்ற குற்றச்சாட்டை நம்புவது கடினம். திருமண வாக்குறுதியை நிறைவேற்றுவார் எனக் கருதி, மீண்டும் மீண்டும் பாலியல் உறவுக்கு அந்த பெண் சம்மதித்ததாக கூறுவது ஜீரணிக்க முடியாதது; சாத்தியமற்றது.
இருவருமே இத்தனை ஆண்டுகள் தங்கள் உறவை தொடர்ந்த நிலையில், அதை வலுக்கட்டாய உறவு என கூற எந்தவித ஆதாரமும் இல்லை. புகார் கூறும் பெண், நன்கு படித்தவர்; நல்ல நிலையில் இருப்பவர். அவருக்கு இத்தனை ஆண்டுகள் எதுவும் தெரியாமல் போக வாய்ப்பு இல்லை.
பல இடங்களுக்கு பணி மாறுதலான போதும், இருவரும் பரஸ்பரம் அடுத்தவர் வீடுகளுக்கு சுமுகமாக சென்று நெருக்கமான உறவை பேணி வந்துள்ளனர். லிவ் இன் உறவை துவங்கியபோது, திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்தார் என்பதற்கான ஆதாரமும் இல்லை.
புகார் தெரிவித்த பெண் கூறும் நிகழ்வுகள் முரணாக உள்ளன. உண்மையிலேயே பலாத்காரம் செய்யப்பட்டிருந்தால், இத்தனை ஆண்டுகள் அவர் எப்படி அமைதியாக இருந்தார்? லிவ் இன் உறவு கசந்ததால், பாலியல் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.
எனவே, ஆணுக்கு எதிராக பலாத்கார குற்ற நடவடிக்கையை எடுக்க உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அவர் மீதான பலாத்கார வழக்கை தொடருவது நியாயமற்றது; சட்ட நடைமுறையை துஷ்பிரயோகம் செய்வதற்கு சமம்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.