இந்த நேரத்திலும் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவது சிறப்பான பலன்களை தரும்..!

விளக்கு ஏற்றுவதன் மகத்துவம் பற்றி அனைவருக்கும் தெரிந்தாலும் விளக்கு ஏற்றுவது தொடர்பாக பலருக்கும் பல சந்தேகங்கள் தொடர்ந்து வருவது உண்டு. எந்த திசையில் விளக்கேற்றலாம், எந்த நேரத்தில் விளக்கேற்றலாம், எத்தனை முக விளக்கு ஏற்ற வேண்டும், எந்த எண்ணெய் மற்றும் திரியை பயன்படுத்தி விளக்கேற்ற வேண்டும், எந்த எண்ணெயில் விளக்கேற்றினால் என்ன பலன் கிடைக்கும், எந்த உலோகத்தால் ஆன விளக்கு ஏற்ற வேண்டும், எந்த எண்ணிக்கையில் விளக்கேற்ற வேண்டும், ஆண்கள் விளக்கேற்றலாமா என்பது உள்ளிட்ட பல சந்தேகங்களும், கேள்விகளும் காலம் காலமாக எழுப்பப்படுகிறது.
அவற்றில் அதிகமானவர்கள் கேட்கும் கேள்வி, கண்டிப்பாக குளித்து விட்டு தான் விளக்கேற்ற வேண்டுமா? பிரம்ம முகூர்த்த வேளையில் விளக்கேற்ற வேண்டும் என்றால் தினமும் ஏற்ற வேண்டுமா? அப்படி தினமும் ஏற்ற வேண்டும் என்றால் தினமும் அதிகாலையில் எழுந்து குளிப்பது சிரமமாக உள்ளது? உடல் நிலைக்கும் ஏற்றுக் கொள்ளாது என பலரும் சொல்லுவது உண்டு. குளிக்காமல் விளக்கேற்றி, பூஜை செய்யலாமா? இப்படி செய்வதால் பலன் இருக்குமா? என்ற சந்தேகம் அதிகமானவர்கள் உள்ளது. அதற்கான விளக்கத்தை வாங்க தெரிந்து கொள்ளலாம்.
காலையில் எழுந்ததும் முதலில் சென்று பின்புற வாசல் அல்லது ஜன்னலை திறந்து விட்டு, அதற்கு பிறகு தான் சென்று முன்புற வாசலை திறக்க வேண்டும். முதலில் வாசல் தெளித்து, மங்கலகரமாக கோலமிட்டு விட்டு, வீட்டிற்குள் வந்து முடிந்தால் குளிக்கலாம். உடல்நிலை காரணமாக குளிக்க முடியாதவர்கள் பல் துலக்கி, கை, கால், முகத்தை சுத்தமாக கழுவி விட்டு வந்து பூஜை அறையில் விளக்கேற்றலாம். விளக்கேற்றி விட்டு நெற்றியில் திருநீறு பூசிக் கொண்டு, உங்களின் வழக்கமான வேலைகளை பார்க்க சென்று விடலாம். இது தீட்டு காலங்களுக்கு பொருந்தாது. இதே போல் மாலை 5 மணி முதல் 7 மணி வரையிலான நேரத்தை விஷ்ணு முகூர்த்தம் என்பார்கள், இந்த நேரத்திலும் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவது சிறப்பான பலன்களை தரும்.
ஒருவேளை நீங்கள் மந்திரங்கள் உச்சரித்து, பூஜை செய்ய போகிறீர்கள், பரிகாரத்திற்காக விளக்கேற்றி பூஜை செய்ய போகிறீர்கள் என்றால் பிரம்மா முகூர்த்த நேரம் உள்ளிட்ட எந்த நேரமாக இருந்தாலும் சுத்தமாக குளித்து விட்டு தான் விளக்கேற்ற வேண்டும். குறிப்பிட்ட நாள் கணக்கில் விரதம் இருந்தோ அல்லது பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து வழிபாடு செய்ய போகிறீர்கள் என்றால் தினமும் அதிகாலையில் தலைக்கு குளிக்க வேண்டும் என்பது கிடையாது. உடலுக்கு மட்டும் குளித்து விட்டு உங்களின் வழிபாட்டினை செய்யலாம். விரதம் துவக்கும் நாள், முக்கியமான நாள், விரதம் நிறைவு செய்யும் நாட்களில் மட்டும் தலைக்கு குளித்து விட்டு பூஜை செய்யலாம்.