1. Home
  2. தமிழ்நாடு

தி.மு.க.வுக்கு பொய் தான் மூலதனம் : மதுரை மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி..!

1

மதுரையில் நேற்று நடந்த மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றினார். முன்னதாக அவருக்கு சர்வ சமய பெரியோர்கள் சார்பில் புரட்சி தமிழர் என்ற பட்டம் வழங்கப்பட்டது. மீனாட்சி அம்மன் உருவம் பொறித்த வெள்ளி செங்கோலும் வழங்கப்பட்டது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, 

அ.தி.மு.க. ஒரு மாபெரும் இயக்கம். மிகப் பெரிய கட்சி. 1972-ல் எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்டு இன்று 51-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதில் 31 ஆண்டு காலம் ஆட்சி செய்த கட்சி நமது கட்சி. அ.தி.மு.க. வை எதிர்க்க எந்த கொம்பனாலும் முடியாது. எந்த கட்சியாலும் முடியாது. காரணம், இது உழைப்பால் உயர்ந்த கட்சி. உழைப்பால் உயர்ந்த தொண்டன் அ.தி.மு.க. தொண்டன். 

திண்டுக்கல் நாடாளுமன்ற தேர்தலில் கட்சி துவங்கிய சில ஆண்டுகளிலேயே கழக வேட்பாளர் வெற்றி பெற்று சாதனை படைத்தார். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு பிரிந்த இயக்கத்தை ஒன்றுபடுத்தினார் அம்மா. 1989-ல் நான் அம்மா அணியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். எம்.பி. தேர்தல், எம்.எல்.ஏ. தேர்தல் என வெற்றி பெற்று அமைச்சரானேன். அம்மாவின் மறைவுக்கு பிறகு முதல்வரானேன். அப்போது இன்றைய முதல்வரும், எதிர்க்கட்சி தலைவராக இருந்தவருமான ஸ்டாலின் இந்த ஆட்சி 10 நாள் தாக்குப்பிடிக்குமா என்று கிண்டலடித்தார். ஆனால் 4 ஆண்டு காலம் சிறப்பாக ஆட்சி செய்தேன். நான் பதவியேற்ற போது கடும் வறட்சி இருந்தது. இருப்பினும் குடிநீர் பிரச்சினையை தீர்த்தேன். கஜா புயல் வந்த போது புயல் வேகத்தை காட்டிலும் சிறப்பாக செயல்பட்டோம். கொரோனா வைரஸ் வந்த போது மக்கள் கஷ்டப்பட்டார்கள். அதையும் சமாளித்தோம். பொதுமக்களுக்கு விலையில்லா அரிசி, சர்க்கரை, குடும்பத்திற்கு ரூ. ஆயிரம் கொடுத்தோம். 

இந்த மாநாடு நடக்கும் மதுரை மண், ராசியான மண். இங்கு தொட்டதெல்லாம் துலங்கும். இவ்வாறு பேசிய எடப்பாடி பழனிசாமி தனது ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட்டார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திட்டங்களான தொட்டில் குழந்தை திட்டம், மழைநீர் சேகரிப்பு, மடிக்கணினி திட்டங்களையும் அவர் குறிப்பிட்டார். மேலும் நான் ஒரு விவசாயி என்றும் அவர்களின் கஷ்ட,நஷ்டம் தமக்கு தெரியும் என்றும் குறிப்பிட்டார். விவசாயிகளின் பயிர்க்கடனை ரத்து செய்தது, டெல்டா மாவட்டத்தை வேளாண் மண்டலமாக அறிவித்ததையும் அவர் குறிப்பிட்டார். மேலும் தி.மு.க. அரசை தாக்கவும் அவர் தவறவில்லை.

தி.மு.க.வுக்கு பொய்தான் மூலதனம் என்று கூறிய அவர், கச்சத்தீவை மீட்போம் என்று முதல்வர் ஸ்டாலின், மீனவர்கள் மாநாட்டில் பேசியதை சுட்டிக்காட்டினார். கச்சத்தீவை தாரை வார்த்ததே தி.மு.க.தான். அன்றைய கருணாநிதி தலைமையிலான அரசுதான் கச்சத்தீவை தாரைவார்த்தது. அதை தட்டிக் கேட்கவும் இல்லை. போராட்டம் நடத்தவும் இல்லை என்று தி.மு.க.வை சாடினார். கச்சத்தீவை மீட்க ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கை அவர் சுட்டிக்காட்டினார். அ.தி.மு.க. தான் மீனவர்களை காப்பாற்றும் அரசு  என்று கூறிய எடப்பாடி, மத்தியில் தி.மு.க. 13 ஆண்டு கூட்டணியில் அதிகாரத்தில் இருந்த போது கச்சத்தீவு பற்றி ஞாபகம் வரவில்லையா? என்று கேள்வி எழுப்பினார். மீனவர்களை ஏமாற்றி பொய் பேசுகிறார் ஸ்டாலின். கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார். 

நீட்டை கொண்டு வந்ததே தி.மு.க.தான். ஆனால் இப்போது போராட்டம் நடத்துகிறார்கள். நீட்டை ஒழிக்க முதல் கையெழுத்து போடுவேன் என்று சொன்னவர்கள் இன்று போராடுகிறார்கள். மக்களை ஏமாற்ற முடியாது. அ.தி.மு.க.வை அழிக்க முடியாது. உங்கள் கட்சியை காப்பாற்றி கொள்ளுங்கள். இவ்வாறு எடப்பாடி பேசினார். 

Trending News

Latest News

You May Like