"சமூக நீதியை வென்றெடுப்போம்!" - பெரியார் நினைவிடத்தில் தவெக தலைவர் விஜய் உறுதி
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவருக்கு வீரவணக்கம் செலுத்தியுள்ளார். "பெரியார் காட்டிய சமத்துவப் பாதையில் பயணித்து சமூக நீதியை வென்றெடுக்க உறுதியேற்போம்" என அவர் தனது தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழகத்தின் சமூக மாற்றத்திற்கு வித்திட்ட தந்தை பெரியாரின் நினைவு நாள் இன்று (டிசம்பர் 24, 2025) தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைமை அலுவலகத்தில், தந்தை பெரியாரின் திருவுருவப் படத்திற்கு விஜய் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மரியாதை செலுத்திய பின், விஜய் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், "சமூக நீதியின் முன்னோடி, சமூகத்தில் புரையோடிப்போயிருந்த மூட நம்பிக்கைகளையும், ஏற்றத் தாழ்வுகளையும் தகர்த்தெறியப் போராடிய பகுத்தறிவுப் போராளி, எமது கொள்கைத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளில் அவருக்கு மரியாதை செலுத்தினேன். தந்தை பெரியார் அவர்கள் காட்டிய சமத்துவப் பாதையில் பயணித்து, சமூக நீதியை வென்றெடுக்க உறுதியேற்போம்" என்று பதிவிட்டுள்ளர்.
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்ட போது, அக்கட்சியின் கொள்கைத் தலைவர்களில் ஒருவராகத் தந்தை பெரியார் அறிவிக்கப்பட்டார். திராவிட நிலத்தின் அடிப்படைத் தத்துவமான சமூக நீதியைக் கையில் எடுத்துள்ள விஜய், பெரியாரின் நினைவு நாளில் அவரை 'எமது கொள்கைத் தலைவர்' எனக் குறிப்பிட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. முன்னதாக, தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வரும் நிலையில், விஜய்யின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் அவரது தொண்டர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.