வாங்க தெரிஞ்சிக்கலாம்..! ரூ.2.50 லட்சம் மானியத்துடன் வீடு வாங்குவது எப்படி..?
தமிழ்நாடு அரசு பல்வேறு வீட்டு வசதி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், கலைஞர் கனவு இல்லம் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. மத்திய அரசும் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடுகட்ட நிதிஉதவி வழங்குகிறது.
வாடகை வீட்டில் வசிப்போர் சொந்த வீடு கட்டும் கனவை நனவாக்கும் வகையில், மத்திய அரசு பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ், தகுதியுள்ள குடும்பங்களுக்கு வீடு கட்ட அல்லது வாங்க ரூ.2.50 லட்சம் வரை நிதியுதவி வழங்குகிறது. இந்நிலையில் பலருக்கும் இந்த திட்டம் குறித்து தெரியப்படுத்த, இந்த திட்டத்தின் பலன்களை மக்களிடம் கொண்டு சேர்க்க 'அங்கிகார் 2025' என்ற பெயரில் சிறப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் தொடங்கியுள்ளது. மத்திய அமைச்சர் மனோகர் லால், கடந்த செப்டம்பர் 4ம் தேதி டெல்லியில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அங்கிகார் 2025 பிரச்சாரம் செப்டம்பர் 4 முதல் அக்டோபர் 31 வரை இரண்டு மாதங்களுக்கு நடைபெறும். இந்தியா முழுவதும் 5,000க்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் இந்த பிரச்சாரம் செயல்படுத்தப்படும். ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட வீடுகளின் கட்டுமான பணிகளை விரைவுபடுத்துவதும், புதிய விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணிகளை துரிதப்படுத்துவதும் இதன் நோக்கமாகும். குறைந்த வருமான பிரிவினருக்கான வீட்டு கடன் உத்தரவாத நிதி அறக்கட்டளை திட்டம் குறித்தும் மக்களுக்கு தெரிவிக்கப்படும்.
2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டம் 2.0 தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், நகர்ப்புறங்களில் வசிக்கும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர், குறைந்த வருவாய் பிரிவினர் மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினர் ஆகியோர் பயன்பெறலாம். இத்திட்டத்தின் மூலம், வீடு கட்ட அல்லது வாங்க ரூ.2.50 லட்சம் வரை நிதி உதவி வழங்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதுவரை, இத்திட்டத்தின் கீழ் 1.20 கோடி வீடுகள் அனுமதிக்கப்பட்டு, அவற்றில் 94.11 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் 'அங்கிகார் 2025' பிரச்சாரம் மற்றும் மாநில அரசின் திட்டங்கள் மூலம், தமிழ்நாட்டில் மேலும் பல குடும்பங்களின் சொந்த வீட்டு கனவு நனவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தகுதியுள்ள மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் அல்லது வங்கிகளை அணுகி விண்ணப்பிக்கலாம்.
.png)