வாங்க தெரிஞ்சிக்கலாம்..! கிருஷ்ண ஜெயந்தியை வீட்டில் எப்படிக் கொண்டாட வேண்டும் தெரியுமா ?
ஸ்ரீ கிருஷ்ணர் பல லீலைகளைப் புரிந்து, மக்களைக் காத்து அருளினார். கம்சன் என்ற அரக்கன், தனது தங்கைக்குப் பிறக்கும் 8 ஆவது குழந்தையின் கையால் கொல்லப்படுவான் என்பதை அசரீரியின் மூலம் அறிந்து தங்கை என்றும் பாராமல் தேவகி - வசுதேவரைச் சிறையில் அடைத்தான். தேவகிக்கு பிறந்த ஒவ்வொரு குழந்தைகளையும் கொன்று வந்தான். கம்சனிடமிருந்து தப்பித்து 8 ஆவதாக பிறந்த, இல்லையில்லை அவதரித்த, கிருஷ்ணரைக் காப்பாற்ற, யமுனை நதியைக் கடந்து, கிருஷ்ணரை வசுதேவர், கோகுலத்தில் வாழ்ந்து வந்த யாதவ குலத்தைச் சேர்ந்த நந்தகோபர் - யசோதையிடம் கொண்டு போய் சேர்த்தனர்.
கோகுலத்தில் அனைவருக்கும் செல்லப் பிள்ளையாக வளர்ந்த கிருஷ்ணர், பல லீலைகளைப் புரிந்தார். வளர்ந்து இளைஞன் ஆனதும், அரக்கன் கம்சனை அழித்தார். பின்னர் மகாபாரதப் போர் என கிருஷ்ணரின் லீலைகள் தொடர்ந்து கொண்டே சென்றன..
கிருஷ்ண ஜெயந்தியை வீட்டில் எப்படிக் கொண்டாட வேண்டும் என்பதையும் தெரிந்துகொள்வோம்.
ஸ்ரீ கிருஷ்ணருக்கு வெண்ணெய் உள்ளிட்ட அனைத்து இனிப்பு பலகாரங்களும் பிடிக்கும். அதனால், அவரவர்களுக்கு முடிந்த அளவுக்கு இனிப்புகளைச் செய்து வழிபட வேண்டும். வெண்ணெய் அவசியம் பூஜையில் இருக்க வேண்டும். அதே போல், குசேலனின் உண்மையான அன்பை, அவர் கொண்டு வந்த அவல் மூலம் வெளிப்படுத்தினார். அதனால், எந்த ஒரு பலகாரத்தையும் செய்ய முடியவில்லையே, என்று கலங்கும் நிலையில் இருப்பவர்கள் கவலைப்பட வேண்டாம். ஸ்ரீ கிருஷ்ணர் பூஜையில், அவல் மற்றும் வெண்ணெய் ஆகிய இரண்டையும் வைத்தாலே, ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா மனதார ஏற்றுக்கொள்வார்.
கிருஷ்ண ஜெயந்தி அன்று இந்த அற்புதமான தினத்தில், ஸ்ரீ கிருஷ்ணரையே நினைத்து உண்ணா நோன்பு இருந்து, அவரது திருநாமங்களை உச்சரிக்கலாம்..கிருஷ்ணரின் பாடல்களை பஜனையாகப் பாடி வழிப்படுவதும் சிறந்தது. கிருஷ்ணர் அருளிய பகவத் கீதை உபதேசத்தைப் பாராயணம் செய்யலாம். தம்மால் முடிந்த அனைத்துவித இனிப்புகள் மற்றும் முறுக்கு, எள்ளடை போன்ற பலகாரங்களையும், அவல் மற்றும் வெல்லத்தால் கலந்து செய்யப்பட்ட இனிப்பு உள்ளிட்ட அனைத்தையும் பூஜை அறையில் வாழை இலையில் வைக்க வேண்டும். வீட்டில் உள்ள சிறு குழந்தைகளின் கால்களை, மாக்கோல மாவில் வைத்து, வாசலில் இருந்து, பூஜையறை வரையிலும் பாதத்தைப் பதிய வைக்கலாம். ஸ்ரீ கிருஷ்ணரே, வீட்டிற்குள் வந்து விட்டது போன்ற ஒரு உணர்வு பொங்கும். தொடர்ந்து, படையிலிட்டு அக்கம், பக்கத்தினர் என சாதி, மதம் பார்க்காமல் அனைவருக்கும் வழங்கி, மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பண்டிகையாக ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடி மகிழ்வோம்..