1. Home
  2. தமிழ்நாடு

ரத்த தானம் செய்வோம் உயிர்களை காப்போம் - முதல்வர் ஸ்டாலின்..!

1

ரத்த தானம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், ஆண்டுதோறும் அக்டோபர் 1-ம் தேதி (இன்று) தேசிய தன்னார்வ ரத்த தான தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, முதல்வர் முக.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:-

ரத்தம் தேவைப்படுவோருக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ரத்தம் அளிப்பது மனிதநேயம் மிக்க உயிர்காக்கும் செயல். ‘ரத்த நன்கொடையின் 20-ம் ஆண்டு கொண்டாட்டம்.. ரத்தக் கொடையாளர் அனைவருக்கும் நன்றிகள்’ என்பதே இந்த ஆண்டுக்கான கருப்பொருள் ஆகும்.

நம் ஒவ்வொருவர் உடலிலும் 5 லிட்டர் ரத்தம் உள்ளது. ரத்த தானத்தின்போது 350 மி.லி. ரத்தம் மட்டுமே எடுக்கப்படுகிறது. ரத்த தானம் செய்ய 20 நிமிடங்கள்தான் ஆகும். 18 முதல் 65 வயது வரையுள்ள ஆண் 3 மாதங்களுக்கு ஒருமுறையும், பெண் 4 மாதங்களுக்கு ஒருமுறையும் ரத்த தானம் செய்யலாம். தானம் செய்தவுடன் அன்றாட வேலைகளை மேற்கொள்ளலாம். தானமாக பெறப்படும் ஓர் அலகு ரத்தம் 4 உயிர்களை காப்பாற்றும். எனவே, அடுத்தவர் உயிர்காக்கும் ரத்த தானத்தை தவறாது செய்வோம்.

தமிழகத்தில் இதற்காக 107 அரசு ரத்த மையங்கள், 247 தனியார் ரத்த மையங்கள் செயல்படுகின்றன. இவற்றின் செயல்பாடுகளை கண்காணிக்க ‘e-RaktKosh’ என்ற வலைதளம் செயல்பாட்டில் உள்ளது. ரத்த தான முகாம், ரத்த கொடையாளர்கள் விவரங்களை இதில் பதிவு செய்யலாம். ரத்த வகைகளின் இருப்பையும் தெரிந்து கொள்ளலாம். இதன்மூலம் ரத்தம் பெறும் நடைமுறை எளிதாக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அரசு ரத்த மையங்கள் மூலம் இலக்குக்கு மேல் 102 சதவீதம் ரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சேகரிக்கப்படும் ரத்தம், அரசு மருத்துவமனைகளில் தேவைப்படும் நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. ரத்தம் தேவைப்படும் ஒருவருக்கு வாழ்வளிக்க, இனம், மதம், மொழி பாகுபாடின்றி மனித நேயத்தோடு தன்னார்வத்துடன் ரத்த தானம் செய்ய முன்வருவோரை உளமாற பாராட்டுகிறேன். மக்களின் உயிர்காக்கும் சேவையில் நாம்அனைவரும் பங்கெடுக்க வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ரத்த தானம் செய்வோம், உயிர்களை காப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like