தை அமாவாசையில் முன்னோரை வணங்குவோம்; ஆசியை பெறுவோம்..!
ஒருவன் தனது பெற்றோரையும், குலதெய்வத்தையும், முன்னோர்களையும் வணங்க மறந்து, மற்ற தெய்வங்களை வணங்கி எவ்விதப் பலனுமில்லை. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த நமது முன்னோர்களை ஆடி, புரட்டாசி, தை மாத அமாவாசை தினங்களில் தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது மிகுந்த நற்பலனைத் தருவதாகும். மேலும், அமாவாசை தினத்தன்று எறும்பு, பசு, காகம், நாய், பூனை மற்றும் அந்தணர்களுக்கு உணவளித்து உபசரித்து அவர்களின் பசியைப் போக்கினால், கடவுளின் ஆசியோடு, முன்னோர்களின் ஆசியும் பூரணமாக நமக்குக் கிடைக்கும்.
தை அமாவாசை தினத்தன்று நீர் நிலைகளான கடல், ஆறு, குளம், ஏரி உள்ளிட்ட இடங்களில் முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளைப் படைத்தும், திதி, தர்ப்பணம் கொடுத்தும் ஏழை எளியோருக்கு அன்னதானம் கொடுப்பது மிகுந்த நன்மை பயப்பதாகும். அப்படி நீர்நிலைகளுக்குச் சென்று தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள், வீட்டிலேயே தர்ப்பணம் கொடுத்து, அதனை அருகில் உள்ள நீர் நிலைகளில் கொண்டு சேர்த்து விடலாம்.
பொதுவாக, அமாவாசை தினத்தில் அன்னம், கருப்பு உளுந்து, கருப்பு எள், வெல்லம், உப்பு, ஆடைகள் போன்றவற்றை ஏழை எளியோருக்கு தானம் அளிப்பது மிகவும் புண்ணியச் செயலாகும். அதோடு, நம்மை விட்டு மறைந்த முன்னோர்களின் ஆசியையும் அது பெற்றுத் தரும். அதிலும், இந்த தை மாத அமாவாசை தினத்தன்று இச்செயல்களைச் செய்வது இரட்டிப்புப் பலன்களைத் தருவதாகும். இப்படிச் செய்வதால், நமது முன்னோர்கள் நற்கதி அடைவதும், பசியாறி திருப்தியுறுவதும் மட்டுமல்லாமல், நம்மையும் ருண, ரோக பிரச்னைகளிலிருந்து விடுவிப்பதோடு, பல்வேறு காரியத் தடைகளையும் போக்கி நற்பலன்கள் நடைபெற அருள்புரிகிறார்கள். தை அமாவாசையில் முன்னோரை வணங்குவோம்; அவர்களின் ஆசியை பூரணமாகப் பெறுவோம்!