பாஜக தனியா நின்னு காட்டட்டும்... அப்போது தெரியும் லட்சணம் - திருமாவளவன்..!
விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளதாவது:-
எனக்குத் தெரிந்து நான் அரசியலுக்கு வந்த 2001-லிருந்து பிஜேபி படாத பாடு பட்டுவிட்டது. திமுகவுடன் கூட்டணி வைத்து பார்த்தார்கள், அண்ணா திமுகவுடன் கூட்டணி வைத்து பார்த்தார்கள்.. யார் யாரோட கூட்டணி வைத்தார்கள். ஆனால், தமிழ்நாட்டுக்குள் அவர்கள் வேர் பிடிக்கவில்லை. சும்மா ஏதோ அண்ணா திமுக ஓட்ட கொஞ்சம் வாங்கிட்டு, அதனால நாங்க வளர்ந்துட்டோம்னு சொல்கிறார்கள். தனியா நின்னு காட்டட்டும். அப்போது தெரியும் லட்சணம்.
அண்ணா.. திராவிடம் என்று சொல்லுகிற போதெல்லாம் தமிழ் தேசியம் என்கிற உணர்வோடுதான் அதை உச்சரித்தார். பெரியார்.. திராவிடம் என்று சொல்லுகிறபோது எல்லாம் தமிழ் தேசியம் என்ற உணர்வோடு தான் அதை கூறினார். அன்றைக்கு மதராஸ் மாகாணத்திற்குள் எல்லா மொழியும் பேசக்கூடியவர்கள் இருந்தார்கள். ஒன்றிலிருந்து மற்றொன்று. திராவிடத்தில் இருந்து தான் தமிழ் தேசியம். திராவிடம் என்ற ஒரு கருத்தில் இருந்ததால் தான் தமிழ் வாழ்ந்தது, தமிழ் இனம் வாழ்ந்தது, தமிழ் நிலப்பரப்பு பாதுகாக்கப்பட்டது. இல்லையெனில் இந்தி எப்போதோ நம்மை சாப்பிட்டுவிட்டிருக்கும், எப்போதோ சனாதனம் நம்மை விழுங்கி இருக்கும், எப்போதோ இங்கு சமஸ்கிருதம் வந்திருக்கும். மோடிக்கு ரொம்ப ஈசியா இருந்திருக்கும்.
50 வருஷத்துக்கு முன்னால நீயும் நானும் இந்தியை கற்றுக்கொண்டிருந்தால், பெரியார் இல்லாமல் இருந்திருந்தால், திராவிட அரசியல் இல்லாமல் இருந்திருந்தால், தமிழ் நிலப்பரப்பு என்பது சனாதனத்தால் விழுங்கப்பட்ட ஒரு நிலமாக மாறி இருக்கும். இந்தி பேசக்கூடியவர்களாக நீயும் நானும் மாறி இருப்போம். இன்னைக்கு பிரச்சினை அதுதான். உனக்கு இந்தி தெரியாது எனக்கு ஹிந்தி தெரியாது அதனால் மோடி இங்கே செல்லாக்காசு. மோடி வந்தாலும், பாரதியார் பாட்டு, திருக்குறள் என ஒரு வரி இரண்டு வரிதான் சொல்ல முடியும். மோடி வித்தை இங்கே எடுபடவில்லை. காரணம் திராவிடம்தான், திராவிட இயக்கங்கள்தான், தந்தை பெரியாரும், அவர்களுடைய சீடர்கள்தான்.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் சமஸ்கிருதத்திற்கு எதிரான போர் இல்லையே! தென் இந்திய மாநிலங்களில் கூட வடவர் ஆதிக்க எதிர்ப்பு என்பது இல்லையே! எந்த மாநிலத்திலும் மாநில உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு இல்லையே! தமிழ்நாட்டில் மட்டும்தான். ஏன் என்றால் அதுதான் பெரியாரின் வெற்றி, பெரியார் அரசியலில் வெற்றி திராவிட அரசியலின் வெற்றி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.