கொரோனா தடுப்பூசி மருந்து பணமா? இலவசமா? குழம்பி நிற்கும் பொதுஜனம்!

உலகம் முழுவதும் கொரோனா என்ற பெருந்தொற்று பரவி வருகிறது. இந்த வைரஸ் நோயினால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். அதே போல, இந்தியாவிலும் அதன் பாதிப்பு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் ஏற்கனவே ஊரடங்கு கட்டுபாடுகளை விதித்தது. பின்னர், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.இந்த நிலையில், கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இதனிடையே, பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வென்றால் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதனை வெளிட்டவர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
அதே போல, கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால், தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும் என நேற்றைய தினம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தடாலடியாக அறிவித்துள்ளார்.
ஆக மொத்தம், "கொரோனா தடுப்பு மருந்து கண்டு பிடித்து, அதை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் போது. நாடு முழுவதும் உள்ள பொது மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுமா ? அல்லது பணம் கொடுத்து தான் வாங்க வேண்டுமா" என்று பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அப்பாவி மக்களின் இந்த ஒற்றை வரி கேள்விக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. ஆனால், யார் பதில் சொல்லப் போகிறார்கள் என்றும் தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உண்மை "கொரோனா தடுப்பு மருந்து" தமிழகம் மற்றும் பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற உள்ள தேர்தலின் போது, அரசியல் முக்கியத்துவம் பெரும் என்பது மட்டும் சத்தியான உண்மை.