1. Home
  2. தமிழ்நாடு

ஆளுநர் ஆர்.என்.ரவி முதலில் காவி உடையணியட்டும் - முரசொலி!

Q

முரசொலி நாளிதழில் கூறியிருப்பதாவது: வான்புகழ் வள்ளுவரை சனாதனக் கூண்டில் அடைத்துக் காவி உடை அணிவிக்கும் ஆளுநர் முதலில் காவி உடை அணிய வேண்டும்.
அவருக்கு இருக்கும் காவிப் பாசம் உண்மையாக இருந்தால், அவர்தான் முதலில் அணிந்து அனைவருக்கும் வழிகாட்ட வேண்டும். அவருக்கு இருக்கும் காவிப் பாசம் உண்மையானதாக அப்போதுதான் இருக்க முடியும்.
திருவள்ளுவர் தினத்தன்று காவி உடை அணிவிக்கப்பட்ட படத்துக்குப் பூத்தூவி இருக்கிறார் ஆளுநர் ரவி. அந்தப் படத்துக்குப் பக்கத்தில் இருக்கும் வள்ளுவர் சிலையில் உள்ள சொற்களை முதலில் வாசிக்க வேண்டும். ‘மெய்ப்பொருள் காண்பது அறிவு’ என்று சொல்லப்பட்டுள்ளது.
அத்தகைய மெய்ப் பொருள் காண்பவராக ஆளுநர் இருந்திருந்தால் அப்படிச் செய்திருக்க மாட்டார். ஆரியத்துக்கு எதிராக எழுந்ததே திருக்குறள். பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுதினார்.
“கோழைப் புலவருள் ஒருவராக மோழைப் பட்டுக் கிடக்க விரும்பாத நம் திருவள்ளுவ இனநலப் பேராசான், தம் நுண்ணறிவுத் திறங்கொண்டு, ஆரியத் தாக்கத்தால் அழிந்துவிடாமல் பல்லாயிரமாண்டுகளாக நம் பழம் பெருந்தமிழினத்தில் உருண்டு திரண்டு உருவாகி நிலைபெற்றிருந்த அறிவியல், வாழ்வியல், மெய்ப் பொருளியல் கருத்துகளையும், பண்பாடுகளையும் எதிர்காலத் தமிழின மக்கள் உணருமாறு, இலைமறை காயாக எடுத்து நிறுவிய இனநலக் காப்பு நூலே நம் அரும்பெறல் செல்வமாகிய திருக்குறள்” என்றார். அதனை அறியாத கும்பலில் ஒருவர்தான் ஆர்.என்.ரவி.
மெய்ப்பொருள் காண்பவராகக் கூட இருக்கத் தேவையில்லை. சட்டப்படி நடப்பவரா ரவி? அரசால் ஏற்கப்பட்ட பட வடிவமைப்புக்கு மாறான படத்துக்கு அவர் மரியாதை சூட்டி இருக்கிறார். இதுவே சட்டப்படி குற்றம் ஆகும்.
அவருக்குச் சட்டமாவது? நீதியாவது? நெறியாவது? வாய்க்கு வந்ததை உளறி, தன் விருப்பத்துக்கு நடந்து, ‘சீப் பப்ளிசிட்டி’ தேடிக் கொள்வதுதான் ஆளுநரின் வழக்கம் என்பதை மக்கள் அறிவார்கள்.
வெள்ளுடையில் வீற்றிருக்கும் திருவள்ளுவர் படத்தை 1950களின் மத்தியில் வரைந்தவர் ஓவிய மேதைகளில் ஒருவரான வேணுகோபால் சர்மா. அவர் வரையும்போது மேற்பார்வை பார்த்தவர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள்.
இந்த ஓவியத்தைத் தமிழின் ஆற்றல்மிகு ஆளுமைகள் அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள். தஞ்சை தமிழ்ச் சங்கத்திலும், புதுச்சேரி தமிழ்ச் சங்கத்திலும் திருவள்ளுவர் ஓவியம் காட்சிப்படுத்தப்பட்டு அனைத்து தமிழறிஞர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
தஞ்சை இராமநாதன் மன்றத்தில் நடைபெற்ற மாநாட்டில் 49 புலவர்கள் கூடி இந்த ஓவியத்தை ஏற்றுக் கொண்டார்கள். பாவேந்தர் பாரதிதாசன், முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம், தெ.பொ.மீனாட்சிசுந்தரம் ஆகியோர் அதில் முக்கியமானவர்கள்.
ஓவியர் வேணுகோபால் சர்மாவின் வீட்டுக்கு வந்து ஓவியத்தைப் பார்த்துச் சென்றவர்கள்:
தோழர் ஜீவா, பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, பெரியவர் பக்தவத்சலம், முத்தமிழறிஞர் கலைஞர், முன்னாள் முதலமைச்சர் பி.சுப்பராயன், திருமுருக கிருபானந்தவாரியார், எழுத்தாளர் கல்கி, கவியரசு கண்ணதாசன், பேராசிரியர் அன்பழகனார், நாவலர் நெடுஞ்செழியன்… இப்படிப் பல்வேறு அறிஞர் பெருமக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓவியத்தை அசிங்கப்படுத்துகிறார் ஆளுநர்.
ஓவியர் கே.ஆர்.வேணுகோபால் சர்மா எழுதிய ‘திருவள்ளுவர் திருவுருவப் பட விளக்கம்’ என்ற நூலை வெளியிட்டவர் பேரறிஞர் அண்ணா அவர்கள். இவை அனைத்தும் 1959 ஆம் ஆண்டு நடந்தவை ஆகும்.
அன்றைய ஒன்றிய அரசு இதனை ஏற்றுக் கொண்டு 1960 ஆம் ஆண்டு திருவள்ளுவர் தபால் தலையை வெளியிட்டது. வேணுகோபால் சர்மா வரைந்த ஓவியத்தையே தபால் தலையாக வெளியிட்டது.
இந்த ஓவியத்தைத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் வைக்க வேண்டும் என்று முதல் குரல் கொடுத்தார் முத்தமிழறிஞர் கலைஞர். ‘நானே வாங்கி வந்து தருகிறேன், வையுங்கள்’ என்று சொன்னார் கலைஞர்.
‘நாங்களே வைக்கிறோம்’ என்று 1964 ஆம் ஆண்டு உறுதி அளித்தார் அன்றைய முதலமைச்சர் பக்தவத்சலம். அன்றைய துணைக் குடியரசுத் தலைவர் ஜாகீர் உசேன் அவர்களால் திருவள்ளுவர் படம் திறந்து வைக்கப்பட்டது.
1967 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைந்த மூன்றாவது மாதத்தில் திருவள்ளுவரின் இந்த ஓவியம் அரசு அங்கீகாரம் பெற்ற ஓவியமாக அரசாணை வெளியிடப்பட்டது.
(G.O.M.S. 1193) அனைத்து அரசு அலுவலகங்களிலும் இந்த ஓவியம்தான் இடம் பெற வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டது. 1989 ஆம் ஆண்டு இந்த ஓவியத்தை நாட்டுடைமை ஆக்கினார் முதலமைச்சர் கலைஞர். நாட்டுடைமை ஆக்கப்பட்ட ஒரே ஓவியம் இதுதான்.
அரசியல் சட்டப்படி பதவி ஏற்றுக் கொண்ட ஆளுநர் சட்டத்தை மீறி, அரசாணைகளை மீறித் தன் விருப்பத்துக்கு வள்ளுவருக்கு காவிச் சாயம் பூசிக் கொண்டிருக்கிறார்.
கி.பி.எட்டாம் நூற்றாண்டில் பரிமேலழகர் தொடங்கி இந்த ஆண்டில் ஆர்.என்.ரவி வரை நூற்றாண்டுதோறும் பலரது படையெடுப்புகளால் வீழ்த்த முடியாத வீரியம் திருக்குறளுக்கு மட்டுமே உண்டு.
தமிழ்நாடு என்ற மாநிலத்தின் பெயரைச் சொல்வதற்கு கூச்சப்படுகிறார், வள்ளுவருக்கு காவி அடிக்கிறார், சனாதன வகுப்பு எடுக்கிறார், குழந்தை திருமணத்தை ஆதரிக்கிறார்.
அம்பேத்கரை அசிங்க படுத்துகிறார், அரசியல் சட்டமே குறைபாடானது என்கிறார், இவ்வளவு பெரிய மேதையாக இருக்கும் ரவியை இந்திய குடியரசுத் தலைவர் ஆக்கலாம். ஐ.நா.சபைக்கே அழைத்துச் செல்லலாம்.
அங்கும் காவி உடையில் செல்லவும். ஆங்கிலேய உடை, ஆங்கில மொழியை அவர் விடுத்து அவர் சொல்வதற்கு அவரே முன்மாதிரியாக நடந்துகாட்ட வேண்டும். அதற்கு ஒரு தேதி குறிக்கவும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like