1. Home
  2. தமிழ்நாடு

முதலில் அண்ணாமலை சட்டமன்றத் தேர்தலில் நிற்கட்டும் : அமைச்சர் சேகர்பாபு!

1

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கொளத்தூரில் ‘அமுதக் கரங்கள்’ திட்டத்தை துர்கா ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை கொளத்தூரில் நடைபெற்ற நலத் திட்ட உதவிகள் வழங்கும் இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலயத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையைச் சரமாரியாக விமர்சித்து, அவருக்கு சவால் விடுத்துள்ளார். அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

நலத்திட்டங்கள் நடைபெறுவது, நாளுக்கு நாள் கோவில்களில் பக்தர்கள் எண்ணிக்கை கூடுவதும், பக்தர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதும், தேவார திருவாசகம் பாடப்படுவதும் அண்ணாமலை போன்றவர்களுக்கு எப்படி வயிற்று எரிச்சலை கிளப்பாமல் இருக்கும்? ஆன்மீகத்தை வைத்து அரசியல் செய்தவர்களுக்கு அது முடியாத காரணத்தினால் இப்படி ஏதாவது பேசிக் கொண்டுதான் இருப்பார்கள். இது காய்ச்ச காய்ச்ச மெருகு ஏறும் இயக்கம். அடிக்க அடிக்க பந்து உயர பறக்கும். அதே போலத் தான் திமுகவை விமர்சனம் செய்தால் மேலும் வளரக் கூடிய இயக்கம். முதலில் அண்ணாமலை சட்டமன்றத் தேர்தலில் நிற்கட்டும். அப்படி நின்றால் அதே சட்டமன்றத் தொகுதியில் திமுகவின் அடிமட்டத் தொண்டனை நிறுத்தி அவரை வீழ்த்துவோம். 2026 சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலை வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக வரட்டும் பார்க்கலாம். இது சவால்.

திருக்கோவில்களில் வழங்கப்படும் அன்னதானத்திற்கு ஆண்டிற்கு ரூ.112 கோடி செலவாகிறது. 3.50 கோடி பேர் பயனடைகின்றனர். கோவில்களில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்படுவதால் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அறநிலையத் துறை மீது பாஜக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. பாஜக ஆட்சிக்கு வந்த உடன், அறநிலையத் துறை ஒழிக்கப்படும் என அண்ணாமலை சூளுரைத்து வருகிறார். இந்நிலையில் தான் அண்ணாமலைக்கு சவால் விடுத்துள்ளார் அமைச்சர் சேகர்பாபு.

Trending News

Latest News

You May Like