இனி அதிமுக கொடி, சின்னத்தை ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்..!
சென்னை எழும்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக திமுக வழக்கறிஞர்களே ஆஜராகி உள்ளனர். கொடநாடு சம்பவத்தில் குற்றவாளிகளை கண்டறிந்து சிறையில் அடைத்தது அதிமுக அரசு தான். கொரோனாவால் கொடநாடு வழக்கில் தாமதம் ஏற்பட்டது. கொடநாடு வழக்கு விசாரணை முடிவதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. வழக்கு போட்டு மிரட்டும் திமுகவின் மாய வித்தைகளை கண்டு அதிமுக ஒருபோதும் அஞ்சாது. அதிமுக கொடி, சின்னத்தை ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சின்னம், கொடி, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கே சொந்தம் என்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் திமுக ஆட்சியில் நடந்த அராஜகங்கள் அனைத்தும் விசாரிக்கப்படும்.
காலை 7 மணிக்கு டாஸ்மாக் கடையை திறந்தால் என்ன ஆகும்? குடித்துவிட்டா பணிக்கு செல்வார்கள்? டாஸ்மாக்கில் கலப்படம் செய்வதை திமுக அமைச்சரே ஒத்துக்கொண்டுள்ளார். டெட்ரா பேக்கில் மது விற்பதை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். டெட்ரா பாக்கெட்டில் மதுபானம் விற்பனை செய்தால் அது விபரீதத்தில்தான் முடியும். மதுபானம் அடைக்கப்பட்டுள்ள டெட்ரா பாக்கெட்டுகளை குழந்தைகள் ஜூஸ் என நினைத்து குடிக்கும் அபாயம் உள்ளது” என்றார்.