தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற வழக்கறிஞர் பேட்டி..!
சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கம்போல் கூடியது. வழக்குகளின் விவரத்தை வக்கீல்கள் குறிப்பிடுவதை நீதிபதிகள் கேட்டுக்கொண்டிருந்தனர். அப்போது ஒரு வழக்கறிஞர், நீதிபதிகள் அமர்ந்துள்ள மேடையை நெருங்கினார். தனது காலணியை கழற்றி, தலைமை நீதிபதியை நோக்கி வீச முயன்றார். அதற்குள் சுதாரித்துக் கொண்ட காவலாளிகள், அவரை தடுத்து நிறுத்தினர்.
அவரை அங்கிருந்து வெளியேற்றினர். அப்போது அந்த வழக்கறிஞர், “சனாதன தர்மத்தை இழிவுபடுத்துவதை சகித்துக்கொள்ள மாட்டோம்’’ என்று கூச்சலிட்டபடி வெளியேறினார். காலணி வீச முயன்ற வழக்கறிஞர் பெயர் ராகேஷ் கிஷோர் (வயது 71) என்றும், டெல்லி மயுர் விஹார் பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. சம்பவம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு பதிவாளருடன் இணைந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வழக்கறிஞரின் செயலுக்கான நோக்கம் குறித்த தகவல்கள் இனிமேல்தான் தெரியும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்த சூழலில், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மீது தாக்குதல் நடத்த முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. ஒழுங்கீனமாக நடந்துகொண்டதால் ராகேஷ் கிஷோரின் வழக்கறிஞர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுவதாக பார் கவுன்சில் அறிவித்தது. இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் பார் கவுன்சில் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணி வீச முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பார் கவுன்சில் என் வழக்கில் விதிகளை மீறிவிட்டது. செப்டம்பர் 16-ம் தேதிக்குப் பிறகு என்னால் தூங்க முடியவில்லை என்பதால், நான் ஏற்கனவே முடிவு செய்திருந்தேன். ஏதோ ஒரு தெய்வீக சக்தி என்னை எழுப்பி, ‘நாடு எரிகிறது, நீங்கள் தூங்குகிறீர்களா?’ என்று கேட்டது. தலைமை நீதிபதி என்னை விடுவித்தது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. போலீஸ் என்னை 3-4 மணி நேரம் விசாரித்தது. நான் மன்னிப்பு கேட்கப் போவதில்லை. கடவுள் என்னை இதைச் செய்ய வைத்தார். அவர் என்னை சிறைக்கு அனுப்பவோ அல்லது தூக்கிலிடவோ விரும்பினால், அது அவரது விருப்பம். இவ்வாறு அவர் கூறினார்.