சட்டக் கல்லூரிகளில் படிக்க மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்..!
கல்லூரிகளில் 2024-2025ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்க உள்ளது. தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் 6ஆம் தேதி வெளியிடப்பட உள்ளன. சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 20ஆம் தேதி வாக்கில் வெளியிடப்பட உள்ளன. அதைத்தொடர்ந்து, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமடையும்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள சட்டக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பதிவு வரும் மே 10ஆம் தேதி தொடங்க உள்ளதாக அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்துடன் இணைவு பெற்ற கல்லூரிகள், சீர்மிகு சட்ட பள்ளிகளில் 5 ஆண்டு படிப்புக்கு விண்ணப்பம் மே 10 ஆம் தேதி தொடங்கவுள்ளது. அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் www.tndalu.ac.in வாயிலாக விண்ணப்பிக்கலாம். மூன்றாண்டு சட்டப் படிப்பு, முதுநிலை சட்ட மேற்படிப்பு மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்று அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்த முழு விவரங்களுக்கு அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.