மறைந்த நடிகர் மாரிமுத்துவின் கடைசி வீடியோ.. ஸ்பெஷல் ஆசிர்வாதம் என சீரியல் நடிகை உருக்கம்!
திரைத்துறையில் பணியாற்றுவதற்காக சென்னை வந்த நடிகர் மாரிமுத்து, கவிப்பேரரசு வைரமுத்துவிடம் உதவியாளராக பணியாற்றினார். பின்னர் திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். ராஜ்கிரணிடம் அரண்மனை கிளி, எல்லாமே என் ராசாதான் படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினார். மணிரத்னம், வசந்த், சீமான், எஸ்.ஜே.சூர்யா, ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய தமிழ் படங்களை இயக்கியுள்ளார். 2011-ல் யுத்தம் செய் படத்தில் மாரிமுத்துவை நடிகராக அறிமுகம் செய்தார் இயக்குநர் மிஷ்கின். வாலி, உதயா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட படங்களில் துணை நடிகராக நடித்தார். தற்போது வெளியான ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்திலும் முக்கிய பாத்திரத்தில் நடிகர் மாரிமுத்து நடித்திருந்தார்.
நடிகர் மாரிமுத்து தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் மூலம் தமிழ்நாட்டின் பட்டி தொட்டி எங்கும் அறியப்பட்டார். சீரிய பகுத்தறிவாதியாக திகழ்ந்து டிவி விவாதங்களிலும் அதனை முழுமையாக வலியுறுத்தி பேசிவந்தார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் காலை டிவி தொடருக்கு டப்பிங் பேசிக் கொண்டிருந்த போது நடிகர் மாரிமுத்துவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த நிலையில் நடிகர் மாரிமுத்து எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் ஆக நடித்த போது அவருக்கு மகளாக நடித்த மோனிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய வீடியோவை மோனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் மாரிமுத்து இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு, மோனிஷாவின் பிறந்தநாள் வருவதற்கு முன்பே அவருக்காக மாரிமுத்து வீடியோ அனுப்பி இருப்பதாக மோனிஷா கூறியிருக்கிறார்.
அதில் மாரிமுத்து பேசுகையில், மோனிஷா எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். என்னால் உன்னுடைய பிறந்தநாளுக்கு நேரில் வாழ்த்து சொல்ல முடியவில்லை. மோனிஷா நீ ரொம்ப திறமையான பொண்ணு. அதனாலதான் இந்த வீடியோ அனுப்புறேன். மோனிஷா, நீ எனக்கு சீரியலில் மகளாக நடித்துக் கொண்டிருக்கிறாய். ஆனால் நிஜத்தில் நீ எனக்கு மகளாக பிறக்கவில்லையே என்று பல நாட்கள் நினைத்துக்கொண்டிருக்கிறேன். ஒரு விதத்தில் பொறாமைப்பட்டேன் என்றும் கூட சொல்லலாம்.
ஏன்னென்றால், உனக்கு அவ்வளவு திறமை இருக்கிறது. நீ நன்றாக படிக்கக்கூடிய பொண்ணு. விளையாட்டிலும் வேற லெவலில் கலக்கிக் கொண்டிருக்கிறதா. உனக்கு எத்தனை கலைகள் தெரியும் என்று நீ ஒவ்வொரு நாளும் சொல்லும்போது எனக்கு வியப்பாக இருக்கிறது. நீயும் உன்னுடைய அக்கா வர்ஷாவும், எத்தனையோ விளையாட்டுகளில் கலந்து கொள்ளுறீங்க. எல்லா திறமையும் உள்ள முழு நிறைவான ஒரு பெண்ணா நான் உன்னை பார்க்கிறேன்.
உன்னுடைய வாழ்க்கையில் நீ பெரிய அளவில் வரவேண்டும். பி.டி உஷா, கல்பனா சாவ்லா மாதிரி, இந்தியாவிலிருந்து எத்தனை பெண்கள் சாதித்து இருக்காங்களோ, அந்த மாதிரி நீயும் சாதிக்கப் போறது எனக்கு தெரியும். அது நீ நடிகையா சாதிக்க போறியா? இல்ல விளையாட்டு வீராங்கனையா சாதிக்க போறியா? இல்ல அதை தாண்டி மூன்றாவதாக வேற ஏதாவது திறமையில் சாதிக்க போறியா என்று எனக்கு தெரியல.
மோனிஷா நீ ஆல் இந்தியா லெவலில் பல பதக்கங்களை பெற்றிருக்கா. இன்னும் அதிகமாக நீ வெற்றி பெறுவ. அதுவும் சமீப காலமாக ஆறு ஏழு எபிசோடுகளாக எதிர்நீச்சல் சீரியலில் பின்னி பெடல் எடுத்துட்ட. அது சம்பந்தமாக உன்கிட்ட பேசி இருக்கேன். வாழ்த்துக்கள் மோனிஷா. என்னுடைய ஆசிர்வாதங்கள் உனக்கு எப்பவும் உண்டு. இவ்வாறு மறைந்த நடிகர் மாரிமுத்து அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.