நிலத்தகராறில் பயங்கரம் : நடுரோட்டில் தம்பதி எரித்துக்கொல்ல முயற்சி..!
எர்ணாகுளத்தை சேர்ந்தவர் கிறிஸ்டோபர்(வயது 58). இவருடைய மனைவி மேரி(54). இவர்களது பக்கத்து வீட்டுக்காரர் வில்லியம்ஸ்(52). இவருக்கும், கிறிஸ்டோபருக்கும் இடையே நிலப்பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக அடிக்கடி அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு 9:30 மணி அளவில் கிறிஸ்டோபரும், அவரது மனைவி மேரியும் அதே பகுதியில் உள்ள சாலையில் மொபட்டில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது மொபட்டை வில்லியம்ஸ் தடுத்து நிறுத்தினார். பின்னர் கையில் வைத்திருந்த கேனை திறந்து, அதில் இருந்த பெட்ரோலை அவர்கள் மீது ஊற்றி தீ வைத்தார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதனால் கிறிஸ்டோபர், மேரி மீது தீப்பற்றி எரிந்தது. படுகாயம் அடைந்து அவர்கள் அலறித்துடித்தனர். சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஓடி வந்தனர். அவர்கள் படுகாயம் அடைந்த கிறிஸ்டோபர், மேரியை மீட்டு எர்ணாகுளத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்தியில் அனுமதித்தனர். அங்கு 60 சதவீதத்துக்கும் மேலான தீக்காயங்களுடன் தம்பதியினர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த எர்ணாகுளம் வடக்கு போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தம்பதியை எரித்துக்கொல்ல முயன்ற வில்லியம்சை பிடிக்க அவரது வீட்டுக்கு சென்றனர். ஆனால் அவர் படுக்கை அறையில் தூக்கில் பிணமாக தொங்கினார்.
அவர் போலீசுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அவரது உடலை போலீசார் மீட்டு எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.