பெண்களே உடனே விண்ணப்பீங்க..! விரைவில் சென்னையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டம் தொடக்கம்..!
அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழ்நாடு அரசு, பெண்கள் நலன், பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களைத் திறம்பட செயல்படுத்தி வருகின்றது. அவற்றோடு, பெண்களின் நலனை உறுதி செய்யும் விதமாக விடியல் பயணத்திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, தோழி விடுதிகள், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கியது, புதுமைப்பெண் திட்டம் போன்ற பல்வேறு புதிய மகளிர் நலத் திட்டங்களை செயல்படுத்தி, பெண்களின் வாழ்வாதாரம் மற்றும் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்துள்ளது.
பெண்களின் பாதுகாப்பில் தமிழ் நாடு சிறந்து விளங்குகின்றது, அதனை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில், ஒரு புதிய முன்னெடுப்பாக ‘இளஞ்சிவப்பு ஆட்டோக்களை’ தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இத்திட்டத்தின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக பயணிக்க, பெண் ஓட்டுநர்கள் மூலம் 250 ஆட்டோக்கள் சென்னை மாநகரில் இயக்கப்பட உள்ளன.
அவசர காலங்களில் புகார் பெறப்பட்டவுடன், காவல் துறையின் மூலம் விரைவான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யும் நோக்கத்தோடு ஒவ்வொரு இளஞ்சிவப்பு ஆட்டோவிலும், பெண்களின் பாதுகாப்பிற்காக காவல்துறை உதவி எண்களுடன் இணைக்கப்பட்ட GPS பொருத்தப்பட்டிருக்கும். பெண்கள் சுய தொழிலில் சிறந்து விளங்க ஊக்கப்படுத்தவும், ஓட்டுநர் உரிமம் பெற்ற பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் இத்திட்டம் வழிவகை செய்யும்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தேவையான தகுதிகள்:
* பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
* கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
* 25 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
* 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
* சென்னையில் குடியிருக்க வேண்டும்.
இதற்கென, சென்னையில் உள்ள 250 பெண்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் தமிழ்நாடு அரசு CNG/Hybrid ஆட்டோ வாங்க மானியமாக வழங்கும். ஆட்டோ வாங்க தேவைப்படும் மீதி பணத்திற்காக வங்கிகளுடன் இணைக்கப்படும். சென்னையில் உள்ள தகுதியான பெண் ஓட்டுநர்கள், இத்திட்டத்தின் கீழ் பயனடைய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சென்னை மாவட்ட சமூக நல அலுவலருக்கு, 8வது தளம், சிங்காரவேலர் மாளிகை, சென்னை – 600 001 என்ற முகவரிக்கு நவ.23ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.