சிறுமிக்கு பாலியல் தொல்லை : கூலி தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை..!
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகா, பகுதியை சேர்ந்தவர் பெருமாள், வயது 59, கூலித்தொழிலாளி. திருமணமானவர்.
இவர், கடந்த 30.9.2019 அன்று தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியை மிரட்டி, வீட்டுக்கு அருகே உள்ள மறைவிடத்திற்கு அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். பின்னர், நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு துடித்துள்ளார். எனவே, மருத்துவமனைக்கு சிறுமியை அவரது பெற்றோர் அழைத்துச்சென்றனர். அப்போது, சிறுமி பாலியல் வன்கொடுமையால் பாதித்திருப்பதை மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சிறுமியிடம் விசாரித்ததில் நடந்த சம்பவம் குறித்து சிறுமி கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் வந்தவாசி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வந்தவாசி மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கூலித்தொழிலாளி பெருமாளை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை, திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பெருமாளுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ₹2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.
மேலும், வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் இழப்பீடாக ₹5 லட்சம் வழங்க உத்தரவிட்டார். தொடர்ந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பெருமாளை போலீசார் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.