குவியும் பாராட்டுக்கள்..! முதன்முறையாக அரசு பணியில் சேர்ந்த திருநங்கை..!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதன்முறையாக இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் திருநங்கைகள் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம் அவர்கள் அரசு வேலைகளில் இட ஒதுக்கீட்டின் பலன்களை பெற முடியும். அரசின் இந்த நடவடிக்கையின் மூலம் தற்போது மாநிலத்தில் முதன்முறையாக திருநங்கை ஒருவர் அரசு பணியில் சேர்ந்துள்ளார்.
மேற்கு சிங்புங் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அமிர் மகதோ. சம்பல்புர் கிராமத்தில் செவிலியர் பயிற்சியை நிறைவு செய்தார். தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் செவிலியர் பயிற்சி பூர்த்தி செய்தவர்களுக்கு சுகாதாரத் துறையில் அரசு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அமிர் மகதோவுடன் சேர்த்து மொத்தம் 365 பேர் பயிற்சியை நிறைவு செய்து அரசு பணிக்கு தேர்வாகி இருக்கின்றனர். அனைவருக்குமான பணி ஆணையை முதல்வர் ஹேமந்த் சோரன் வழங்கி உள்ளார். இது குறித்து அமிர் மகதோ கூறுகையில்,
எனது தாய்க்கு செவிலியராக வேண்டும் என்பது லட்சியமாக இருந்தது. ஆனால் பொருளாதாரம், குடும்பச் சூழல் காரணமாக அவரது லட்சியம் கனவாகவே போனது. எனவே என்னை செவிலியராக பணியில் அமர்த்த வேண்டும் என்று எண்ணினார். அவரது கனவு தற்போது நிறைவேறி இருக்கிறது.
நான் தற்போது ஜார்க்கண்ட் மாநில சுகாதாரத் துறையில் சேர்ந்துள்ளேன். இது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு மிக்க நன்றி என்று கூறி உள்ளார். ஜார்க்கண்ட் மாநில அரசின் இத்தகைய நடவடிக்கையை பலரும் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.