குவியும் பாராட்டுக்கள்..! வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்த பச்சைக்கிளி..தண்ணீர் கொடுத்து காப்பாற்றிய காவலர்கள்..!!

திருநெல்வேலி மாவட்டத்தில் சராசரியாக 100 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கு வெயில் பதிவாகியுள்ளது. வெயிலின் தாக்கத்தால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆனால் விலங்குகள், பறவைகளின் நிலையோ சற்று மோசமாக உள்ளது. அவற்றை பாதுகாக்கும் வகையில், தண்ணீர் தொட்டிகள் அமைப்பது உள்ளிட்ட பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் பச்சைக்கிளி ஒன்று திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளது. அதைக் கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் பாலசுப்பிரமணியன், அதனை தூக்கி வந்து சக காவலர்களுடன் சேர்ந்து, அங்குள்ள குடிநீர் தொட்டியில் கிளியை நனைத்துள்ளார்.
இதனால் வெயிலின் தாக்கத்தால் மயக்கத்தில் இருந்த கிளி எழுந்துகொண்டது. தொடர்ந்து, அவர் கிளியை தண்ணீர் குடிக்க வைத்து, பொரிகடலை கொடுத்து, கிளியைப் பறக்க வைத்துள்ளார். காவலர் மேற்கொண்ட இந்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதோடு, அனைவர் மத்தியிலும் பாராட்டைப் பெற்றுள்ளது.