1. Home
  2. தமிழ்நாடு

குவியும் பாராட்டுக்கள்..! குடிநீர் தொட்டியில் விழுந்த 2 வயது குழந்தையை மீட்ட எஸ்ஐ..!

Q

வீட்டில் உள்ள பெற்றோர்கள், தங்களது குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். குழந்தைகளை, தண்ணீர் தொட்டி, விலங்குகள் அருகில் விளையாட விடக்கூடாது என்பது உள்பட பல்வேறு அறிவுறுத்தல்களை, குழந்தைகள் நல அமைப்பாளர்கள் கூறி வருகின்றனர். ஆனால் சிலர், இதனை சிறிதும் கண்டு கொள்வதே இல்லை. இதனால் குழந்தைகளுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது.
குறிப்பாக, உயிர் சேதம் ஏற்படும் அளவுக்கு பெரும் விபத்துக்களுக்கான வாய்ப்புகளும் உருவாகிறது. இதுபோன்ற காரணத்தால், பெங்களூருவில் குடிநீர் தொட்டிக்குள் விழுந்த குழந்தையை காவல்துறை எஸ்ஐ ஒருவர், பத்திரமாக மீட்டுள்ளார். இச்சம்பவம், அப்பகுதீயில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெங்களூரு காவல்துறையில் எஸ்ஐயாக பணியாற்றி வருபவர் நாகராஜ். இவர் இன்று காலை, பேடராயனபுரா பகுதியில் பைக்கில் ரோந்து சென்றார். அப்போது, ஒரு, வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த 2 வயது குழந்தை திடீரென10 அடி ஆழ குடிநீர் தொட்டிக்குள் தவறி விழுந்தது. இதை பார்த்த எஸ்ஐ நாகராஜ், உடனடியாக தொட்டியில் குதித்து, அந்த குழந்தையை பத்திரமாக மீட்டார்.
பின்னர் குழந்தையை அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அந்த குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. சற்றும் எதிர் பாராத நேரத்தில், பள்ளத்தில் விழுந்த குழந்தையை பத்திரமாக மீட்ட எஸ்ஐயை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். மேலும், இந்த வீடியோ காட்சி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து குழந்தைகள் நல ஆர்வலர்கள் கூறுகையில், வீட்டில் உள்ள பெரும்பாலான பெண்கள், டிவி சீரியல்களிலும், செல்போன்களிலும் மூழ்கி விடுவதால், குழந்தைகளை பராமரிக்க முடியாத நிலை உள்ளது. வீட்டில் முதியவர்கள் இருந்தால், அவர்களிடம் குழந்தைகளை விட்டு வைத்து பாதுகாக்கலாம். ஆனால், இன்றைய சூழலில், எந்த வீட்டிலும் முதியோர் என்பதே இல்லாத நிலை உள்ளது. திருமணம் ஆனதும், தனிக்குடித்தனம் செல்லும் நிலைக்கு பெண்கள் மாறிவிட்டனர்.
உதாரணத்துக்கு குழந்தைகளுககு சளி, இருமல் ஏற்பட்டால், வீட்டில் உள்ள முதியோர், அவர்களுக்கான கை வைத்தியம் (சித்தா முறை) செய்வார்கள். அதனால் குழந்தைகள் நலமாகவும், திடமாகவும் வளர்வார்கள். ஆனால் தற்போது, குழந்தைகளுக்கு அதுபோன்ற எவ்வித பத்தியமும், வைத்தியமும் இல்லை. இதனால் பெரும்பாலான குழந்தைகள் நொறுக்கு தீனிகளுக்கு அடிமையாகவும், சிறுவயதிலேயே கண்ணாடி போடும் நிலையில் உள்ளனர்.
கடந்த காலங்களில் கண்ணுக்கு கண்ணாடி தேடும் அவசியம் இல்லை. அப்படி தேவையானால், குறைந்தது 45 வயதை தொடும்போது தேவைப்படும். ஆனால் இன்று 5 வயது குழந்தை கண்ணாடி போடுகிறது. இதற்கு, வீட்டில் இருக்கும் பெண்களே முழு காரணம். குழந்தைகளை பொறுப்பாக கவனிக்காமல் இருப்பதால், அவர்களது உடல்நிலை மட்டுமல்ல, உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும் என்றனர்.

Trending News

Latest News

You May Like