குவியும் பாராட்டுக்கள்..! ரூ.2 கோடி கேட்டு பள்ளி மாணவன் கடத்தல்..! 3 மணி நேரத்தில் மீட்ட போலீசார்..!
மதுரை, எஸ் எஸ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் மைதிலி ராஜலட்சுமி. புறவழிச்சாலையை ஒட்டி, அவருக்குச் சொந்தமாக வணிக வளாகமும் வீடுகளும் உள்ளதாகக் கூறப்படுகிறது.மைதிலியின் மகன் மதுரையிலுள்ள ஒரு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், வியாழக்கிழமை (ஜூலை 11) ஆட்டோவில் பள்ளிக்குச் சென்ற அச்சிறுவனை, ஆட்டோ ஓட்டுநரோடு ஒரு கும்பல் கடத்தியது. பின்னர் மைதிலியைக் கைப்பேசிவழி தொடர்புகொண்ட அக்கும்பல், இரண்டு கோடி ரூபாய் கொடுத்தால் மட்டுமே அவருடைய மகனை விடுவோம் எனக் கூறி மிரட்டியது.
இதனையடுத்து, எஸ் எஸ் காலனி காவல் நிலையத்தில் மைதிலி புகார் அளித்தார்.அவரளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். பின்னர், கடத்தல் கும்பலைக் கண்டுபிடித்த காவல்துறை, அவர்களைப் பின்தொடர்ந்தது. அப்போது, காவல்துறையினர் பின்தொடர்வதை அறிந்த கடத்தல் கும்பல் அம்மாணவனையும் ஓட்டுநரையும் மதுரை நாகமலைப் புதுக்கோட்டை நான்குவழிச் சாலையில் விட்டுவிட்டு தப்பியோடியது.
கடத்தப்பட்ட மூன்று மணி நேரத்தில் மாணவனைப் பத்திரமாக மீட்ட காவல்துறையினரைப் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.