குவியும் பாராட்டுக்கள்..! அறுவை சிகிச்சையின்றி மூச்சுக்குழாயில் சிக்கிய திருகானியை அகற்றிய அரசு மருத்துவர்கள்..!
பெரம்பலூரை சேர்ந்த மூன்று வயது சிறுவன், கடந்த 13-ம் தேதி காலை கணுக்கால் கொலுசு திருகானி தனது வாய் வழியாக போட்டுக் கொண்டான். இதனால் அதிர்ச்சியடைந்த அவனது பெற்றோர் உடனே அவனை இலுப்பூர் மருத்துவமனைக்கு கூட்டி சென்று அங்கு அவனுக்கு எக்ஸ்ரே படங்கள் எடுத்து பார்த்துள்ளனர். இதில் திருகானி சிறுவனின் வலது பெருமூச்சு குழாயில் இருப்பது தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அங்கிருக்கும் மருத்துவர்கள் அந்த சிறுவனை உடனே மேல் சிகிச்சைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .
பின்னர் திருச்சி கி.ஆ.பெ.அரசு மருத்துவக்கல்லூரி முதல்வரும், அரசு பொதுமருத்துவமனை முதல்வருமான ச.குமரவேல், காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை துறைத்தலைவா் ராதாகிருஷ்ணன், உதவி பேராசிரியா் அண்ணாமலை, மயக்கவியல்துறை பேராசிரியா் செந்தில்குமார், மோகன் ஆகியோர் கொண்ட குழுவினா், குழந்தைக்கு மயக்கமளித்து, உள்நோக்கி (ரிஜிடு பிராங்கோஸ்கோப்) மூலம் பிரதான மூச்சுக் குழாயில் சிக்கியிருந்த கொலுசு திருகானி, ரத்தப்போக்கு, மூச்சு விடுதலில் சிரமமின்றி வெற்றிகரமாக அகற்றினா்.
தற்போது சிறுவன் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அந்தத் திருகானி அங்கேயே விட்டிருந்தால், இன்னும் பல பகுதிகளுக்குச் சென்று தொற்றை ஏற்படுத்தியிருக்கலாம் என மருத்துவா்கள் தெரிவித்தனா்.
குழந்தைகள் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே உணவு உண்பதை தவிர்ப்பது, படுத்துக் கொண்டே உணவு உண்பதை தவிர்ப்பது, படித்துக்கொண்டே நொறுக்குத்தீனி திண்பது போன்றவற்றில் குழந்தைகள் ஈடுபடுமாயின் அவர்களுக்கு தெரியாமலேயே உணவோடு, ஆபத்தும் அவர்களைச்சென்றடையும். ஆகையால் குழந்தைகள் இருக்கும் இடங்களில் சிறுகுறு பொருட்களை வைத்துவிட்டு செல்வதும், கண்காணிக்காமல் விடுவதும் அவர்களது உயிருக்கு ஆபத்தாக முடிய வாய்ப்பு உள்ளதால் பெற்றோர்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.