1. Home
  2. தமிழ்நாடு

குவியும் பாராட்டுக்கள்..! கோவை பள்ளி மாணவி உருவாக்கியுள்ள ஏ.ஐ. திறன் கொண்ட இயந்திரம்!

1

கிராம பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் உதவிடும் நோக்கில் கோவையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று வரும் மஹாஸ்ரீ எனும் மாணவி, ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தானாக மருந்துகளை வழங்கக்கூடிய இயந்திரம் (Automated Medicine Dispenser) ஒன்றை உருவாக்கியுள்ளார். இதற்கு 'சகாயம்' என பெயர் சூட்டியுள்ளார். 

கிளினிக், ஆரம்ப சுகாதாரா நிலையம், மருந்தகம் மற்றும் மருத்துவமனைகளை பல கிலோமீட்டர் நடந்து சென்று அணுக வேண்டிய நிலையில் உள்ள கிராமப்பகுதி மக்களுக்கு இது உதவும் என மஹாஸ்ரீ கூறுகிறார்.

இந்த இயந்திரத்தில் 1 தொடு-திரை (Touchscreen), 1 ஸ்பீக்கர்,  ஏ.ஐ சென்சார் அமைப்புகள் மற்றும் 3 டிரே பிரிவுகளில் காய்ச்சல், தலைவலி, இருமல் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றுக்கான மருந்துகள் வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களுக்கு உள்ள சாதாரண காய்ச்சல் உள்ளிட்ட உபாதைகளுக்கு மருந்துகளை பெற தொடு திரையில் உள்ள பட்டன்களை தொடவேண்டும். அதை தொட்டால், ஸ்பீக்கரில் தகவல் தமிழில் உறுதி செய்யப்பட்டு, அதன்பின்னர்  மருந்து வெளிவரும்.

இந்த இயந்திரத்தை மஹாஸ்ரீ திருப்பூரில் உள்ள வட்டாலபதி கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் வைத்து செயல்விளக்கம் அளித்துள்ளார். இந்த கிராமத்தில் இருந்து மருத்துவமனை மற்றும் மருந்தகம் அணுக 4 கிலோமீட்டர் செல்லவேண்டும் என்பதால் அங்கு இது சோதனைக்கு வைக்கப்பட்டது. இந்த இயந்திரத்திற்கு அங்குல மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக மஹாஸ்ரீ கூறியுள்ளார்.

அதே சமயம், இந்த இயந்திரம் இருப்பதால் உடல் உபாதை ஏற்பட்டால் இதை மட்டுமே பயன்படுத்திக்கொள்ளலாம் என்று  எண்ணுவதில் அர்த்தமில்லை எனவும் இது முதல் உதவி போன்றதே எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், காய்ச்சல் உள்ளிட்ட பிற உடல் உபாதைகள் இருந்தால் குறிப்பிட்ட சில நாட்கள் வரை மட்டுமே இந்த மருந்துகளை எடுக்கவேண்டும் எனவும், அதற்கு பின்னரும் பாதிப்பு தொடர்ந்தால் மருத்துவரை அணுகுவதுதான் சரியான தீர்வு என்ற செய்தியை பதிவு செய்து அதை அந்த இயந்திரத்தில் உள்ள ஸ்பீக்கரில் ஒலிக்க வைக்க செய்துள்ளார் மஹாஸ்ரீ.

அரசின் உதவியும், அரசு சாரா அமைப்புகளின் உதவியோடு இதை ஒரு கண்காணிப்பாளரின் கீழ் கிராமப்புற மக்கள் பயன்படுத்த தான் முயற்சியெடுக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கோவை சுகுணா பிப் பள்ளியில் படிக்கும் இந்த மாணவியின் கண்டுபிடிப்பு கவனத்தை பெற்றுள்ளது.  

Trending News

Latest News

You May Like