Krishna Janmashtami SPL : கிருஷ்ணர் தலையில் மயில் இறகு கிரீடம் எப்படி வந்தது தெரியுமா ?
கடவுளின் அவதாரம் கிருஷ்ணர் என அனைவரும் அறிந்திருந்த போதும், அவர் செய்யும் சேட்டைகள் அதிகம் தான். இருப்பினும் கிருஷ்ணரின் முகத்தை பார்த்ததும் அவர் செய்யும் குறும்புகள் எல்லாம் மறந்து அவர் வேண்டியவற்றை கொடுக்கும் அளவிற்கு அவரின் மந்திர புன்னகையும், மயக்கும் அழகும், குழந்தைத்தனமும் இருந்தது.குட்டி கண்ணன் அவதரித்த திருநாளில் அவரின் உபதேசங்கள், வாழ்த்துக்களை பகிர்ந்து நாமும் வளம்பெறுவோம்..
இந்நிலையில் சின்னக் கண்ணனின் அழகுக்கு மேலும் அழகு சேர்ப்பது அவன் தலையில் சூடியிருக்கும் மயில் இறகு. பட்டு பீதாம்பரங்களாலும், எண்ணற்ற ஆபரணங்களாலும் கிருஷ்ண பகவான் அலங்கரிக்கப்பட்டாலும், அதற்கெல்லாம் மணிமகுடமாக விளங்குவது,இந்த மயிலிறகு தான். கிருஷ்ணனின் தலையை அலங்கரிக்கும் பக்கியம் மயிலிறகிற்கு தான் வாய்த்தது.
மயில் இறகு எப்படி கிருஷ்ணனின் தலையில் வந்தது?. அதன் பின்னணியில் ஒரு சுவாரசியமான கதை உண்டு. பட்டு பீதாம்பரம் தரித்து ஏகபோக செல்வாக்குடன் தரணியை ஆள வேண்டிய கிருஷ்ணன், ஆயர்பாடி சிறுவர்களுடன் மண்ணில் புரண்டு விளையாடுவான். பூவின் வாசத்தை மறைக்க முடியாதது போல, குட்டிக் கிருஷ்ணன் முகத்தில் ஒளி வீசிய தெய்வீக அழகு, அனைவரையும் கொள்ளைக் கொண்டது.
கோகுலவாசிகளின் செல்லப் பிள்ளையான அவன்,அம்மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லும் ஒரு மதியுக மன்னனாகவே விளங்கினான். கண்ணனின் மேல் காதலும் பற்றும் கொண்ட ஆயர்பாடி சிறுவர்கள்,தங்கள் மனதுக்கு நெருக்கமான கண்ணனை கௌரவிக்க விரும்பி,அங்கே சுற்றித்திரிந்த மயிலை பிடித்து,அதனிடம் இருந்து ஓர் இறகை எடுத்து கிருஷ்ணனின் தலையில் கிரீடம் போல் செருகினார்கள். அன்று முதல் கிருஷ்ணனின் தலைமுடியில் மயிலிறகு நீங்காத இடம் பிடித்தது.இன்னும் சொல்லப் போனால், மயில் இறகு கிருஷ்ணனின் அடையாளமாகவே மாறிவிட்டது.